கோவையில் குளத்தில் குதித்த வி.ஏ.ஓ., விவகாரம் இரு நாட்கள் தேடியும் லஞ்ச பணம் மாயம்

கோவை:பேரூரில், வி.ஏ.ஓ., லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் இருந்து தப்ப முயற்சித்து, குளத்தில் குதித்த விவகாரத்தில், இரண்டு நாட்களாக தேடியும், லஞ்சமாக பெற்ற பணம் மாயமாகியுள்ளது.
கோவை, தொம்பிலிபாளையத்தை சேர்ந்தவர் கிருஷ்ணசாமி. இவர், வாரிசு சான்று வாங்க, விண்ணப்பித்து இருந்தார். சான்று வழங்க மத்வராயபுரம் வி.ஏ.ஓ., வெற்றிவேல், 5,000 ரூபாய் லஞ்சமாக கேட்டுள்ளார். கிருஷ்ணசாமி 1,000 ரூபாய் கொடுத்தார்.
நேற்றுமுன்தினம் இரவு, பேரூர், சிட்டி யூனியன் வங்கி அருகே வந்து, மீதி பணத்தை தர வேண்டும் என, வெற்றிவேல் கூறியுள்ளார். கிருஷ்ணசாமி அளித்த புகாரின்படி, லஞ்ச ஒழிப்பு போலீசார், ரசாயனம் தடவிய, 3,500 ரூபாய் பணத்தை, கிருஷ்ணசாமி மூலம் வெற்றிவேலிடம் கொடுக்க வைத்தனர்.
அப்போது, போலீசார் பிடிக்க முயன்ற போது, தனது இருசக்கர வாகனத்தில் வெற்றிவேல் தப்ப முயன்றார். பேரூர் பெரிய குளத்தின் கரை அருகே செல்லும்போது, போலீசாருக்கு பயந்து வெற்றிவேல் குளத்தில் குதித்தார்.
லஞ்ச ஒழிப்பு போலீசார் வெற்றிவேலை கைது செய்து, பேரூர் தாலுகா அலுவலகத்தில் வைத்து விசாரணை நடத்தினர். அப்போது வெற்றிவேலிடம், ரசாயனம் தடவி கொடுக்கப்பட்ட லஞ்சப்பணம் இல்லை.
குளத்தில் விழுந்தபோது, பணம் குளத்து சேற்றில் சிக்கியிருக்க வாய்ப்புள்ளதாக கருதிய, லஞ்ச ஒழிப்பு போலீசார், விடிய விடிய, குளத்தில் பணத்தை தேடினர். நேற்று காலை, பேரூர் பேரூராட்சி தூய்மை பணியாளர் 10 பேரை கொண்டு, வலை பயன்படுத்தியும், இரண்டு ஜே.சி.பி., இயந்திரம் பயன்படுத்தியும் தேடினர்.
நேற்றும் பணம் கிடைக்காததால், தேடும் பணியை கைவிட்டனர். தொடர்ந்து, வெற்றிவேலிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தினர். பகல், 1:15 மணிக்கு, பேரூர் தாலுகா அலுவலகத்தில் இருந்து, வெற்றிவேலை அழைத்து சென்று, சிறையில் அடைத்தனர்.
போலீசார் சிலர் கூறுகையில், ரசாயனம் தடவிய பணத்தை லஞ்சமாக பெற்று வெற்றிவேல் தனது சட்டை பாக்கெட்டில் வைத்துள்ளார். அவர், குளத்தில் விழுந்தபோது, அந்த ரசாயனம், அவரின் சட்டையிலும் ஒட்டிக்கொண்டது. அதனால், சட்டையை ஆதாரமாக எடுத்துக்கொண்டுள்ளனர். அதோடு, அவர் லஞ்சப்பணம் பெற்ற பகுதியில் உள்ள சி.சி.டி.வி., பதிவுகளையும், லஞ்ச ஒழிப்பு போலீசார் எடுத்துக்கொள்வார்கள். இதனால், இவ்வழக்கில் இருந்து வெற்றிவேல் தப்ப முடியாது' என்றனர்.
மேலும்
-
இந்திய மாணவிக்கு விசா ரத்து: அமெரிக்காவிலிருந்து வெளியேறினார்
-
மன அழுத்தத்தை போக்க உதவும் சாதனம்
-
குருவாயூர் கோவில் மேல்சாந்தி தேர்வு
-
கூகுள் 'குரோம் பிரவுசர்' பயன்படுத்துவோருக்கு எச்சரிக்கை
-
கோயில் நிதியில் 'ரிசார்ட்' கட்டும் திட்டம் நிறுத்தம் ஐகோர்ட்டில் அரசு தகவல்
-
பாலியல் புகார்கள் மீது நடவடிக்கை பள்ளிக்கல்வித்துறையை பின்பற்றுமா உயர்கல்வி துறை?