காஞ்சி ரவுடி வசூல் ராஜா கொலை வழக்கு 10 பேர் கைது: 4 பேருக்கு மாவு கட்டு 5 கல்லுாரி மாணவர்களுக்கும் தொடர்பு

காஞ்சிபுரம்,:காஞ்சிபுரம் ரவுடியான வசூல் ராஜா, கடந்த 11ம் தேதி, வெடிகுண்டு வீசி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், 5 கல்லுாரி மாணவர்கள் உட்பட 10 பேரை போலீசார் கைது செய்தனர். அதில் 4 பேர் தப்பியோட முயற்சித்தபோது விழுந்ததால், கை எலும்பு முறிந்து மாவு கட்டு போடப்பட்டு உள்ளதாக போலீசார் தெரிவித்தனர். இந்த கொலை பழிவாங்கும் நோக்கத்தில் நடந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
காஞ்சிபுரம் மாமல்லன் நகரைச் சேர்ந்தவர் ராஜா என்கிற வசூல் ராஜா, 38; இவர் மீது கொலை, கொலை முயற்சி, மிரட்டி பணம் பறித்தல், அடிதடி என, 20க்கும் மேற்பட்ட வழக்குகளோடு, காஞ்சிபுரத்தில், 'ஏ' பிளஸ் பிரிவு ரவுடியாக வலம் வந்தார்.
இந்நிலையில், காஞ்சிபுரம் மாமல்லன் நகரில் இருந்து திருக்காலிமேடு ரேஷன் கடை அருகே, கடந்த 11ம் தேதி, பிற்பகல் 12:00 மணியளவில் வந்தார். அப்போது, தனியாக இருந்த வசூல் ராஜா மீது, இரண்டு இருசக்கர வாகனங்களில் வந்த ஐந்து பேர், திடீரென நாட்டு வெடிகுண்டு வீசியுள்ளனர். இதில் நிலை தடுமாறி விழுந்த வசூல் ராஜாவின் முகம் மற்றும் உடலின் பல்வேறு பாகங்களில் கத்தியால் சரமாரி வெட்டினர். படுகாயமடைந்த வசூல் ராஜா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். வெட்டிய நபர்கள், உடனடியாக அங்கிருந்து தப்பித்து ஓடினர்.
காஞ்சி தாலுகா போலீசார், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து, கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர். மேலும், வசூல் ராஜாவின் முந்தைய குற்ற சம்பவங்கள் பற்றியும் ஆராய்ந்தனர்
கொலை செய்துவிட்டு தப்பியோடிய இளைஞர்களின் காட்சிகள், திருக்காலிமேடு பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகியிருந்தது. காட்சிகளில் பதிவாகியிருந்த நபர்களின் புகைப்படங்களை வைத்து போலீசார் விசாரணை நடத்தியதில், அவர்களின் பெயர், விபரங்கள் தெரியவந்தன.
இதையடுத்து, திருமால்பூர் ரயில் நிலையம் அருகே இக்கொலை வழக்கு தொடர்புடைய இளைஞர்கள் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, போலீசார் சென்றபோது, அங்கிருந்த பரத், 20; சிவா, 19; திலீப்குமார், 19; சூர்யா, 19; சுரேஷ், 21, ஆகிய ஐந்து பேரை போலீசார் கைது செய்தனர், அப்போது, தப்பி ஓடிய பரத், சிவா, திலீப்குமார் ஆகிய மூன்று பேரின் கைகளில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாக போலீசார் தெரிவிக்கின்றனர்.
போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தியதில், இக்கொலையில் தொடர்புடைய மேலும் பலர் பற்றி தகவல் கிடைத்தது. அதன்படி, ஜாகீர்உசேன், 25. சுல்தான், 32; ஆகிய இருவரும் வாலாஜாபாத் வெண்குடி அருகே பதுங்கியிருந்தபோது, ஜாகீர் உசேனை போலீசார் பிடிக்க முயன்றபோது, அங்கு விழுந்து கை எலும்பு முறிந்தது. சுல்தானையும் போலீசார் கைது செய்தனர்.
மேலும் கிடைத்த தகவல்களை வைத்து, மோகனசுந்தரம், 18; மணிமாறன், 19; சரண்குமார், 20, ஆகிய மூன்று பேரையும் போலீசார் பிடித்தனர். இவ்வழக்கில், மொத்தம் 10 பேரை போலீசார் கைது செய்த நிலையில், காஞ்சிபுரத்தின் ரவுடி பொய்யாக்குளம் தியாகுவும், செங்கல்பட்டு மாவட்டம், கூடுவாஞ்சேரியைச் சேர்ந்த அசோக், 23, என்பவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.
கை உடைந்த நான்கு பேருக்கும், காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் நேற்று முன்தினம் போலீசார் சிகிச்சைக்கு சேர்த்த பின், நேற்று, நீதிமன்ற காவலில் 10 பேரையும், வேலுார் சிறையில் நேற்று போலீசார் அடைத்தனர்.
கொலைக்கான பின்னணி விபரம் குறித்து போலீசார் கூறியதாவது:
கைது செய்யப்பட்டவர்களில், திருக்காலிமேடு பகுதியைச் சேர்ந்த சுல்தான், 32. இவரது அண்ணன் நிவாஸ்கான் என்பவரை, 2018ல், வசூல்ராஜாவின் கூட்டாளிகள், கொலை செய்துள்ளனர். இதற்கு பழிவாங்கும் நோக்கில், வசூல்ராஜாவை கொலை செய்ய சுல்தான் உள்ளிட்ட நபர்கள் திட்டமிட்டுள்ளனர்.அப்போது, திருக்காலிமேடு பகுதியில் வசிக்கும் கல்லுாரி இளைஞர்கள் சுல்தான் உள்ளிட்ட நபர்களோடு சேர்ந்துள்ளனர்.
வசூல்ராஜாவை கொலை செய்ய பல மாதங்களுக்கு முன்பாகவே திட்டம் தீட்டப்பட்டது. கொலை சம்பவத்தில் ஈடுபட கல்லுாரி மாணவர்களும் தயாராகினர். அதன்படி, சிவா, திலீப், சூர்யா, மோகனசுந்தரம், மணிமாறன் என, ஐந்து கல்லுாரி மாணவர்கள் இக்கொலை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர்.வசூல் ராஜாவை கொலை செய்ய, சம்பவ இடத்திற்கு பரத், திலீப், சிவா, சுரேஷ், சூர்யா என, ஐந்து இளைஞர்கள் டூ - வீலர்களில், கையெறி குண்டு வீசி, கத்தியால் வெட்டி கொாலை செய்தது போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது.
கூடுவாஞ்சேரியில் உள்ள அசோக் என்பவர் கையெறி குண்டு தயாரித்து கொடுத்துள்ளார். அவர், ஐந்து குண்டுகள் தயாரித்து கொடுத்ததில், மூன்று குண்டுகள் வீசி இளைஞர்கள் பயிற்சி எடுத்த பின், மீதமுள்ள 2 குண்டுகள் வைத்து, கொலை செய்துள்ளனர். அசோக்கை நாங்கள் தேடி வருகிறோம்.கைதானவர்களிடம் இருந்து இரண்டு டூ - வீலர்கள், 9 வெட்டு கத்திகள், 4 மொபைல் போன்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
கல்லுாரி மாணவர்கள் ஐந்து பேரும், படிப்பில் நாட்டமில்லாமல், தவறான நட்பு வட்டாரம் அமைந்திருப்பதாகவும், ஏரியாவில், அனைவரும் தங்களை பார்த்து பயப்பட வேண்டும் என, நோக்கத்தில் இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர். பிரபல ரவுடி பொய்யாக்குளம் தியாகு, இந்த வழக்கில் சம்பந்தம் இருக்க முகாந்திரம் இருப்பதால், அவரையும் இவ்வழக்கில் சேர்த்திருக்கிருறோம்.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
மேலும்
-
இந்திய மாணவிக்கு விசா ரத்து: அமெரிக்காவிலிருந்து வெளியேறினார்
-
மன அழுத்தத்தை போக்க உதவும் சாதனம்
-
குருவாயூர் கோவில் மேல்சாந்தி தேர்வு
-
கூகுள் 'குரோம் பிரவுசர்' பயன்படுத்துவோருக்கு எச்சரிக்கை
-
கோயில் நிதியில் 'ரிசார்ட்' கட்டும் திட்டம் நிறுத்தம் ஐகோர்ட்டில் அரசு தகவல்
-
பாலியல் புகார்கள் மீது நடவடிக்கை பள்ளிக்கல்வித்துறையை பின்பற்றுமா உயர்கல்வி துறை?