மனைவி தற்கொலையில் கைதானவரை கொலை செய்து ஆற்றில் வீசிய கொடூரம்

பவானி:ஈரோடு மாவட்டம், பவானி அருகே ஜல்லிக்கல்மேடு பகுதி காவிரி ஆற்றில், சில நாட்களுக்கு முன் ஆண் சடலம் மிதந்தது. பவானி போலீசார் உடலை மீட்டனர். உடலில் பல இடங்களில் வெட்டுக்காயம், நெஞ்சு பகுதியை பிளந்து கல் வைத்து கட்டப்பட்டிருந்தது. கொடூரமாக கொலை செய்து உடல் ஆற்றில் வீசப்பட்டது தெரிய வந்தது.

உடலை பெருந்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி, கொலையாளிகளை பிடிக்க இரு தனிப்படை அமைக்கப்பட்டது. விசாரணையில், கொலை செய்யப்பட்டவர், பவானியை அடுத்த தொட்டிபாளையம் மதியழகன், 30, என, கண்டுபிடித்தனர்.

மதியழகனின் மனைவி கீர்த்திகா, ஆறு மாதங்களுக்கு முன் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். கீர்த்திகா, தன் சாவுக்கு கணவர் மதியழகன், மாமியார், மாமனார், மதியழகனின் அண்ணன், தாய்மாமன் ஆகிய ஐந்து பேரே காரணம் என, கடிதம் எழுதினார்.

இதன் அடிப்படையில், மதியழகன் உட்பட ஐந்து பேரை போலீசார் கைது செய்தனர். ஜாமினில் வந்த ஐவரும், பவானி போலீஸ் ஸ்டேஷனில் தினமும் கையெழுத்திட்டு வருகின்றனர். இந்நிலையில் தான் மதியழகன் கொலை செய்யப்பட்டுள்ளார்.

மதியழகன் குடும்பத்தினர், கீர்த்திகாவின் பெற்றோரிடம் சில நாட்களாக தகராறு செய்து வந்துள்ளனர். அதேசமயம் மதியழகன் மீது வேறு சில வழக்குகள் இருப்பதும், விசாரணையில் தெரிய வந்தது. அவரை கொலை செய்தது யார் என்பது தெரியவில்லை. இதனால் இவர்கள் இருவரின் உறவினர்களிடம் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement