அ.தி.மு.க., தீர்மானம் தோல்வி !

1


சென்னை: எதிர்கட்சியான அதிமுக கொண்டு வந்த சபாநாயகர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் சட்டசபையில் தோல்வி அடைந்தது. முன்னதாக நம்பிக்கை இல்லா தீர்மானம் கோரி எதிர்கட்சி துணை தலைவர் உதயக்குமார் மனு அளித்தார். இந்த தீர்மானத்தின் மீது விவாதம் நடந்தது. பா.ஜ., பா.மக., உறுப்பினர்கள் இந்த விவாதத்தில் பங்கேற்கவில்லை.


எதிர்கட்சி தலைவர் பழனிசாமி பேசுகையில்: சபாநாயகர் நடுநிலை தவறி விட்டார். எதிர்கட்சி உறுப்பினர்கள் பேசும்போது அனுமதிக்க மறுக்கிறார். மேலும் விவாதங்கள் நேரடியாக ஒளிபரப்பப்படும் என்ற திமுகவின் வாக்குறுதிகள் பின்பற்றப்படவில்லை. ஆண்டுக்கு 100 நாட்கள் சட்டசபை நடத்தப்படும் என தேர்தல் வாக்குறுதி என்னாச்சு. இவ்வாறு பல கேள்விகள் எழுப்பினார்.


முதல்வர் ஸ்டாலின் சபாநாயகருக்கு பாராட்டு





முதல்வர் ஸ்டாலின் குறுக்கிட்டு பேசுகையில்: சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவதால் எங்களுக்கு எந்தவொரு சங்கடமும் இல்லை. 2006, 2011 ல் நான் உள்ளாட்சி துறை அமைச்சராக இருந்த போது அப்பாவுவை தெரியும். சபாநாயகர் நியாயமானவர் .நேர்மையான உண்மை கருத்துக்களை ஆணித்தரமாக எடுத்து சொல்பவர். இவரை பற்றி தெரிந்ததால் தான் அவரை சபாநாயகராக அமர்த்தினோம். அவருக்கு எதிரான தீர்மானத்தை கண்டு வருந்துகிறேன்.


ஜனநாயக உரிமைகளை மதிக்கக்கூடியவர். ஆசிரியராக இருந்து அரசியலுக்கு வந்த இவர் பண்பாளர். அதிமுக ஆட்சியில் எத்தனை விதிமீறல்கள் நடந்துள்ளன. சபையில் தற்போது சுதந்திர காற்றை சுவாசிக்க முடிகிறது. சபாநாயகர் அப்பாவுவை எண்ணி மகிழ்ச்சி அடைகிறேன். அரசின் மீது குற்றம் குறை சொல்ல வாய்ப்பு இல்லாததால், உள்கட்சி பிரச்னையை மறைக்க இதுபோன்ற தீர்மானத்தை கொண்டு வந்துள்ளனர். இதனை கண்டு வருந்துகிறேன். இந்த சபாநாயகருக்கு எதிரான தீர்மானத்தை அவை ஏற்காது என தெரிவிக்கிறேன். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.

காங்., மதிமுக, இடதுசாரி எதிர்ப்பு



இந்த தீர்மானத்தை காங்கிரஸ், மதிமுக, விடுதலை சிறுத்தைகள், இடதுசாரிகள் எதிர்த்து பேசினர். சபாநாயகர் நடுநிலையோடு செயல்படுகிறார். காழ்ப்புணர்ச்சி காரணமாக இந்த தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது என இக்கட்சியின் மூத்த நிர்வாகிகள் பேசினர். தொடர்ந்து நடந்த குரல் ஓட்டெடுப்பில் சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி அடைந்தது.

Advertisement