கலெக்டர் அலுவலகத்தில் வெடிகுண்டு சோதனையில் சோகம்; தேனீக்கள் கொட்டியதில் 70 பேர் காயம்

1

திருவனந்தபுரம்; கேரளாவில் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற வெடிகுண்டு சோதனையின் போது தேனீக்கள் கொட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.



திருவனந்தபுரம் கலெக்டர் அலுவலகத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டு உள்ளதாக இ மெயில் மூலம் மிரட்டல் வந்தது. இது குறித்து காவல்துறை உயரதிகாரிகளுக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டது.


இதையடுத்து, உடனடியாக போலீசார்,வெடிகுண்டு நிபுணர்கள், மோப்ப நாய்கள் உதவியுடன் சம்பவ பகுதிக்கு விரைந்தனர். வெடிகுண்டு ஏதேனும் உள்ளதா என அவர்கள் தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கினர்.


அப்போது கலெக்டர் அலுவலக வளாக கட்டடத்தின் பின்பக்கத்தில் இருந்த பெரிய கூட்டில் தேனீக்கள் பறக்க ஆரம்பித்தன. அங்கே குழுமியவர்களை சுழன்று, சுழன்று கடிக்க தொடங்கியது. தேனீக்கள் வட்டமிட்டபடி, கடிக்க ஆரம்பிக்க, வலி தாங்காமல் பலரும் மறைவான இடங்களை நோக்கி ஓடினர்.


இருப்பினும், தேனீக்கள் கடித்ததில் கிட்டத்தட்ட 70க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.


இதுகுறித்து கலெக்டர் அனு குமாரி கூறுகையில், தேனீக்கள் கொட்டியதில் ஒருசிலர் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். அவர்கள், மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.


வெடிகுண்டுகள் இங்கேயுள்ள பைப்புகளில் ஒளித்து வைக்கப்பட்டு உள்ளன என்ற தகவலின் பேரில் சோதனை நடத்தப்பட்ட போது தான் இந்த சம்பவம் நடந்தது. சோதனையில் வெடிகுண்டு எதுவும் இல்லை, அது வெறும் மிரட்டல் என்பது தெரிய வந்தது என்றார்.

Advertisement