வண்டலுார் பூங்கா விலங்குகளுக்கு கோடையை சமாளிக்க சிறப்பு ஏற்பாடு

தாம்பரம்,
தமிழகத்தில் கோடை காலம் துவங்குவதற்கு முன்னரே, வெயில் சுட்டெரித்து வருகிறது. இந்நிலையில், வண்டலுார் உயிரியல் பூங்காவில் பராமரிக்கப்பட்டு வரும் விலங்குகளை, வெப்பத்தின் தாக்கத்தில் இருந்து பாதுகாக்க, நிர்வாகம் சார்பில் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

பறவைகளின் கூண்டின் மேற்கு மற்றும் கிழக்கு பகுதிகளைச் சுற்றி, சாக்குப் பையால் போர்த்தி, அடிக்கடி தண்ணீர் தெளிக்கப்படுகிறது.

விலங்குகள் உள்ள பகுதியில், குட்டைகளில் தண்ணீர் வற்றாமல் நிரப்பப்படுகிறது. மனித குரங்கு இருப்பிடத்தில், திறந்தவெளி தண்ணீர் குளியல் வசதி செய்யப்பட்டுள்ளது.

பறவை மற்றும் விலங்குகளுக்கு அடிக்கடி சூட்டை தணிக்கக்கூடிய தர்பூசணி, கிர்ணி பழம், வெள்ளரி உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன.

யானை மற்றும் காண்டாமிருகத்திற்கு, ஷவர் குளியல் வசதி செய்யப்பட்டுள்ளது. நெருப்புக்கோழி, ஒட்டகச்சிவிங்கி, வரிக்குதிரை கூண்டுகளில் ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை தண்ணீர் சுழற்றி அடிக்கும் வகையில், குழாய் பொருத்தப்பட்டுள்ளது.

Advertisement