தண்டவாளத்தில் பாறாங்கல் ரயில் விபத்து தவிர்ப்பு

நாகர்கோவில்:கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் அருகே தண்டவாளத்தில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த பாறாங்கற்களை கண்டு லோகோ பைலட் பரசுராம் எக்ஸ்பிரஸ் ரயிலை நிறுத்தியதால் விபத்து தவிர்க்கப்பட்டது.

நாகர்கோவிலில் இருந்து மங்களூருக்கு தினமும் அதிகாலை 4:30 மணிக்கு பரசுராம் எக்ஸ்பிரஸ் ரயில் செல்கிறது. நேற்று காலை நாகர்கோவில் இருந்து இந்த ரயில் புறப்பட்டு இரணியல் ரயில் நிலையத்தை நெருங்கியது. அப்போது தொலைவில் தண்டவாளத்தில் சிறிய பாறாங்கற்கள் அடுக்கி வைத்திருப்பதை ரயிலின் லோகோ பைலட் கண்டார். இதை தொடர்ந்து வேகத்தை குறைத்து ரயிலை நிறுத்தினார்.

ரயில்வே அதிகாரிகள் மற்றும் போலீசார் கற்களை அப்புறப்படுத்திய பின்னர் 15 நிமிடத்திற்கு பின் ரயில் அங்கிருந்து புறப்பட்டு சென்றது. நேற்று அதிகாலை 1:45 மணிக்கு திருநெல்வேலியில் இருந்து பிலாஸ்பூர் செல்லும் விரைவு ரயில் இவ்வழியாக சென்றுள்ளது. அப்போது தண்டவாளத்தில் கற்கள் வைக்கப்படவில்லை. அதன் பிறகு தான் யாரோ மர்ம நர்கள் கற்களை வைத்துள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.

சம்பவ இடத்தின் அருகே வீடுகளில் உள்ள சி.சி.டிவி. கேமரா பதிவுகளை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ரயிலை கவிழ்க்க நடந்த சதியா என்பது உறுதி செய்யப்படவில்லை என ரயில்வே போலீசார் தெரிவித்தனர்.

Advertisement