முதல்வரின் வெளிநாடு பயணத்திற்கு ரூ.7 கோடி செலவு; சந்தேகம் கிளப்பும் துபாய் பயணச்செலவு

68


சென்னை: தமிழக முதல்வரின் வெளிநாட்டு பயணச் செலவுகளுக்கு ரூ.7.12 கோடி செலவிடப்பட்டுள்ளதாக ஆர்.டி.ஐ., மூலம் தெரிய வந்துள்ளது. இதில், துபாய் பயணச் செலவு குறித்த விபரங்கள் தெரிவிக்காததால் சந்தேகம் எழுந்துள்ளது.

முதல்வராக பொறுப்பேற்றது முதல் ஸ்டாலின், முதலீடுகளை ஈர்ப்பது உள்ளிட்ட காரணங்களுக்கு வெளிநாட்டு பயணங்களை மேற்கொண்டார். அந்த வகையில், துபாய், சிங்கப்பூர், ஜப்பான், ஸ்பெயின் மற்றும் அமெரிக்கா சென்று வந்துள்ளார்.

இந்த நிலையில், முதல்வரின் வெளிநாட்டு பயணச் செலவுகள் குறித்த விபரங்களை சமூக ஆர்வலர் காசிமயன் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பெற்றுள்ளார்.

அதன்படி, 2023ம் ஆண்டில் சிங்கப்பூர் பயணத்திற்கு ரூ.26.84 லட்சமும், ஜப்பான் பயணத்திற்கு ரூ.88.06 லட்சமும் செலவிடப்பட்டுள்ளது. அதேபோல, 2024ம் ஆண்டில் ஸ்பெயினுக்கு செல்ல ரூ.3.98 கோடியும் அமெரிக்கா செல்ல ரூ.1.99 கோடியும் செலவிடப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.
அதில், 2022ம் ஆண்டு முதல்வர் ஸ்டாலின் துபாய் சென்ற போது அரசு செலவிடப்பட்ட தொகை குறித்த விபரங்கள் கொடுக்கப்படவில்லை. இது பல்வேறு கேள்விகளையும், சந்தேகங்களையும் எழுப்பியுள்ளது.

முதல்வர் ஸ்டாலினின் வெளிநாட்டு பயணங்களின் போது, அவரது குடும்பத்தினரும் செல்வதற்கு அரசு பணத்தை பயன்படுத்துவதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. ஆனால், கடந்த 2022ம் ஆண்டு, முதல்வரின் குடும்பத்தினர் மற்றும் கட்சியினரின் பயணச் செலவுகளை தி.மு.க., பொறுப்பேற்றுக் கொண்டதாக அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம் அளித்திருந்தார்.
ஆனால், ஆர்.டி.ஐ., மூலம் பெறப்பட்ட தகவலில் துபாய் செலவு குறித்த விபரங்களும், முதல்வர் ஸ்டாலின் குடும்பத்தினரின் பயணச் செலவுகளை தி.மு.க., ஏற்றுக் கொண்டதா? என்பது பற்றிய தகவலும் இடம்பெறாதது, கேள்விகளை எழச் செய்துள்ளது.

Advertisement