சாலையோர உணவகமாக மாறிய நிழற்குடை வஞ்சுவாஞ்சேரியில் பயணியருக்கு ‛நோ யூஸ்'

ஸ்ரீபெரும்புதுார், குன்றத்துார் ஒன்றியம், வைப்பூர் ஊராட்சிக்குட்பட்ட வஞ்சுவாஞ்சேரியில், 2,000க்கும் அதிகமான வீடுகள் உள்ளன. வண்டலுார் -- வாலாஜாபாத் சாலையில், வஞ்சுவாஞ்சேரி பேருந்து நிறுத்தத்தில் பயணியர் நிழற்குடை அமைக்கப்பட்டுள்ளது.
தாம்பரத்தில் இருந்து, வாலாஜாபாத், காஞ்சிபுரம், வேலுார், ஸ்ரீபெரும்புதுார் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் பேருந்துகள் இந்த நிறுத்தத்தில் நின்று செல்லும்.
பள்ளி, கல்லுாரிக்கு செல்லும் மாணவ - மாணவியர், வேலைக்கு செல்லும் ஊழியர்கள் என, தினமும் 1,000க்கும் மேற்பட்டோர் இந்த பேருந்து நிறுத்தத்தை பயன்படுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், அப்பகுதியைச் சேர்ந்த தனி நபர் ஒருவர், பேருந்து நிறுத்தத்தில் உள்ள பயணியர் நிழற்குடையை ஆக்கிரமித்து, சாலையோர தள்ளுவண்டி உணவகத்தை நடத்தி வருகிறார்.
நிழற்குடை இருக்கையில் உணவகத்திற்கு தேவையான் பொருட்களை வைத்தும், உணவகத்திற்கு வரும் நபர்கள், நிழற்குடை இருக்கையில் அமர்ந்து சாப்பிடுகின்றனர்.
இதனால், பேருந்திற்காக காத்திருக்கும் பயணியர், நிழற்குடைக்குள் அமர இடமின்றி அவதி அடைகின்றனர்.
நிழற்குடை மற்றும் இருக்கைகள் இருந்தும், பயணியர் வெளியில் கால்கடுக்க காத்திருக்க வேண்டிய அவல நிலை உள்ளது.
மேலும், இரவு நேரங்களில் உணவகத்திற்கு வரும் வாகன ஓட்டிகள், பேருந்து நிறுத்தத்தை ஆக்கிரமித்து வாகனத்தை நிறுத்தி செல்கின்றன. இதனால், அரசு பேருந்துகள் சாலை நடுவே நிறுத்தி பயணியரை ஏற்றி செல்வதால், விபத்து ஏற்படும் சூழல் அதிகரித்து உள்ளது.
எனவே, பொதுமக்களின் பயன்பாட்டிற்காக கட்டப்பட்ட பயனியர் நிழற்குடையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வலுத்துள்ளது.