போலீஸ் குடியிருப்பில் குடிநீர் விரயம்; கண்டுகொள்ளாத நகராட்சி நிர்வாகம்

பல்லடம் : பல்லடம் போலீஸ் குடியிருப்பில், குடிநீர் விரயமாகி கழிவுநீர் கால்வாயில் கலந்து வருகிறது.

கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஏற்கனவே, குடிநீர் தட் டுப்பாடு பரவலாக துவங்கியுள்ள நிலையில், எதிர்வரும் நாட்களில் தட்டுப்பாடு மேலும் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது.

இதன் காரணமாக, குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துவதுடன், வீணாக்காமல் இருக்க வேண்டியதும் அவசியம். ஆனால், பல இடங்களில், குடிநீர் விரயமாவது தொடர்கதையாக உள்ளது. பல்லடம் போலீஸ் ஸ்டேஷன் அடுக்குமாடி குடியிருப்பில், 300க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இவற்றில், போலீசார் குடும்பத்துடன் வசிக்கின்றனர். ஒவ்வொரு முறை குடிநீர் வினியோகிக்கப்படும்போதும் இக்குடியிருப்பு பகுதியில் இருந்து குடிநீர் விரயமாகிறது.

குடியிருப்புக்கு செல்லும் வழித்தடத்தில் குடிநீர் ஆறுபோல் ஓடி கழிவுநீர் கால்வாயில் கலந்து யாருக்கும் பயனின்றி வீணாகி வருகிறது. கிராம பகுதிகளில் உள்ள பொதுமக்கள் பலர், குடிநீர் கிடைக்காமல் குடங்களுடன் அலைகின்றனர். ஆனால், இங்கோ, குடிநீர் ரோட்டில் வழிந்தோடி கழிவுநீர் கால்வாயில் கலந்து வருகிறது.

அதிகாரிகளும் இது குறித்து அலட்சியப்படுத்துவதால், பொதுமக்களுக்கு முறையாக கிடைக்க வேண்டிய குடிநீர் கிடைக்காமல் வீண் விரயம் ஏற்படுகிறது. எனவே, நகராட்சி அதிகாரிகள் இது குறித்து ஆய்வு மேற்கொண்டு குடிநீர் விரயமாவதை தடுக்க நடவடிக்கைஎடுக்க வேண்டும்.

Advertisement