மூன்று பேர் கொலை வழக்கு; சி.பி.சி.ஐ.டி., விசாரணை

பொங்கலுார் : பல்லடம் அருகே மூவர் கொலை வழக்கில் சி.பி.சி.ஐ.டி., விசாரணை துவங்கியது.

பல்லடம் அடுத்த சேமலைக் கவுண்டம்பாளையத்தில் விவசாய குடும்பத்தைச் சேர்ந்த தெய்வசிகாமணி, 78 அவரது மனைவி அலமேலு, 75, மகன் செந்தில்குமார், 46 ஆகியோர் கடந்த நவ., 29ல் தோட்டத்து வீட்டில் கொடூரமாக கொலை செய்யப்பட்டனர். வீட்டில் இருந்த எட்டு சவரன் நகை மாயமானது. அவிநாசிபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கில், 14 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வந்தனர்.

நுாற்றுக்கணக்கான 'சிசிடிவி' கேமரா பதிவுகளை கைப்பற்றி ஆய்வு செய்து வந்தனர். கொலை நடந்து நான்கு மாதங்கள் ஆகியும் இதுவரை குற்றவாளிகளை நெருங்க முடியவில்லை. மாநில அரசு சி.பி.சி.ஐ.டி., விசாரணைக்கு உத்தரவிட்டு இருந்தது. தற்போது சி.பி.சி.ஐ.டி., எஸ்.பி., ஸ்ரீதேவி தலைமையிலான போலீசார் கொலை நடந்த பகுதியில் நேற்று முதல் விசாரணையை துவக்கினர்.

Advertisement