இந்தியாவில் நடக்குமா ஒலிம்பிக்? என்ன சொல்கிறார் ஐ.ஒ.சி., புதிய தலைவர்

6

புதுடில்லி: ''ஒலிம்பிக் நடத்தும் நாட்டினை தேர்வு செய்வது குறித்து சில யோசனைகள் உள்ளன. அடுத்த வாரம் இதை பகிர்ந்து கொள்கிறேன்,'' என ஐ.ஒ.சி., புதிய தலைவர் கிறிஸ்டி கவன்ட்ரி தெரிவித்துஉள்ளார்.


சர்வதேச ஒலிம்பிக் சங்க (ஐ.ஒ.சி.,) புதிய தலைவராக ஜிம்பாப்வே விளையாட்டுத்துறை அமைச்சர், ஒலிம்பிக் நீச்சலில் இரு முறை தங்கம் வென்ற முன்னாள் வீராங்கனை கிறிஸ்டி கவன்ட்ரி 41, தேர்வு செய்யப்பட்டார்.


ஒலிம்பிக் தினமான ஜூன் 23ல் பொறுப்பேற்க உள்ள கிறிஸ்டி கவன்ட்ரி, 131 ஆண்டு ஐ.ஒ.சி., வரலாற்றில் முதல் பெண் தலைவர், முதல் ஆப்ரிக்கர் என பெருமை பெற்றார். இதனிடையே 2036ல் ஒலிம்பிக் போட்டி நடத்த இந்தியா முயற்சித்து வருவது குறித்து கிறிஸ்டி கவன்ட்ரி கூறியது:


ஒலிம்பிக் நடத்தும் நாடு குறித்த பேச்சுவார்த்தை விரைவுபடுத்தப்படும். இதற்கென உள்ள செயல்முறைகள், தற்போது நடந்து வருகின்றன. அடுத்த சில மாதங்களுக்கு இது தொடரும். இதில் அனைத்து உறுப்பினர்களையும் ஈடுபடுத்த வேண்டும் என நினைக்கிறேன். எனக்கும் சில யோசனைகள் உள்ளன. அடுத்த வாரம் உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement