ஷிப்ட் நேரத்தில் ரயில்வே கேட் மூடல்; என்.எல்.சி., தொழிலாளர்கள் பாதிப்பு

மந்தாரக்குப்பம்; என்.எல்.சி., இரண்டாம் சுரங்கம் ஷிப்ட் நேரத்தில் ரயில்வே கேட் மூடப்படுவதால் தொழிலாளர்கள் சரியான நேரத்திற்கு பணிக்கு செல்ல முடியாமல் சிரமத்திற்கு ஆளாகினர்.

கடலுார்-திருச்சி, நாகூர்- பெங்களூரு, கடலுார்-சேலம் தினசரி இருமுறை பயணிகள் ரயில் நெய்வேலி ரயில் நிலையம் வழியாக இயக்கப்படுகிறது. இது தவிர ஊத்தங்காலில் உள்ள தனியார் அனல் மின் நிலையத்துக்கு வடலுாரில் அருகே தினசரி நிலக்கரி ஏற்றி செல்லும் சரக்கு ரயில்களும் இயக்கப்படுகின்றன.

மந்தாரக்குப்பத்திலிருந்து நெய்வேலி டவுன்ஷிப்பிற்கு செல்லும் சாலை வடக்குவெள்ளுர் பகுதியில் ரயில்வே கேட் உள்ளது.

இவ்வழியாக ஆயிரக்கணக்கான இருசக்கர வாகனங்கள், பள்ளி வாகனங்கள், பஸ், லாரிகள், கனரக வாகனங்கள் தினசரி ரயில்வே கேட்டை கடந்து செல்கின்றன.

மேலும், ஷிப்ட் நேரத்தில் சரக்கு ரயில் செல்லும் போது ரயில்வே கேட் மூடப்படுவதால் என்.எல்.சி., இரண்டாம் சுரங்கத்தில் பணிபுரியும் தொழிலாளர்கள் அலுவலக பணி, இரண்டாம் கட்டப் பணிக்கு செல்லும் தொழிலாளர்கள் சரியான நேரத்துக்கு பணிக்கு செல்ல முடியாத சூழ்நிலை ஏற்படுவது வாடிக்கையாக உள்ளது.

நேற்று மதியம் 1:40 மணி முதல் 2:00 மணி வரை நிலக்கரி ஏற்றிச் செல்லும் சரக்கு ரயில் செல்வதற்கு ரயில்வே கேட் மூடப்பட்டதால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. என்.எல்.சி., தொழிலாளர்கள் சிரமத்திற்கு ஆளாகினர்.

என்.எல்.சி., இரண்டாம் சுரங்க நுழைவு வாயில் பகுதியில் இருந்து 2:00 மணிக்கு அனைத்து என்.எல்.சி., பிக்-அப் வண்டிகள் சுரங்க பகுதிக்கு செல்வதால் தொழிலாளர்கள் அவசர அவசரமாக பணிக்கு செல்லும் போது வாகன விபத்துக்கள் ஏற்படும் சூழ்நிலை உள்ளது.

ரயில்வே கேட் நீண்ட நேரம் மூடப்படுவதால் ரயில்வே ஊழியர்களுக்கும், தொழிலாளர்களுக்கும் தினசரி வாக்குவாதம் ஏற்படுகிறது. எனவே சரக்கு ரயில் நேரத்தை மாற்றி அமைக்க என்.எல்.சி., நிர்வாகம் மற்றும் ரயில்வே நிர்வாகத்திற்கு தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement