மேல்பாதி திரவுபதி அம்மன் கோவில் பிரச்னை குறித்த சமாதான கூட்டம்

விழுப்புரம் : மேல்பாதி தர்மராஜா திரவுபதி அம்மன் கோவில் சீரமைப்பு பணிகள் முடிந்ததும் திறப்பது தொடர்பாக விரைவில் அறிவிக்கப்படும் என வருவாய் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அடுத்த மேல்பாதி தர்மராஜா திரவுபதி அம்மன் கோவிலில் கடந்த 2023ம் ஆண்டு ஜூன் 7ம் தேதி ஒரு சமுதாயத்தினர் கோவிலுக்குள் செல்வதை கிராம மக்கள் தடுத்தனர். அதில் ஏற்பட்ட பிரச்னை காரணமாக ஆர்.டி.ஓ., பிறப்பித்த 145 தடை உத்தரவுவை தொடர்ந்து, கோவிலை பூட்டி 'சீல்' வைக்கப் பட்டது.

சென்னை உயர்நீதிமன்றம் அளித்த இடைக்கால உத்தரவின்பேரில் கடந்தாண்டு மார்ச் 18ம் தேதி முதல் கோவிலை திறந்து நிர்வாகம் சார்பில் ஒரு கால பூஜை மட்டும் நடந்து வந்தது. அதனைத் தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், ஆர்.டி.ஓ., பிறப்பித்த ௧௪௫ தடை உத்தரவை ரத்து செய்து, அனைத்து சமுதாயத்தினரும் கோவிலுக்குள் சென்று வழிபடவும், இதுதொடர்பாக அனைத்து சமுதாயத்தினரையும் அழைத்து சமாதான கூட்டம் நடத்திட உத்தரவிட்டது.

அதன்பேரில் கடந்த 19ம் தேதி விழுப்புரம் ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் நடந்த கூட்டத்தில் சுமூக தீர்வு எட்டாத நிலையில், நேற்று மீண்டும் விழுப்புரம் தாலுகா அலுவலகத்தில் சமாதான கூட்டம் நடந்தது.

ஆர்.டி.ஓ., முருகேசன் தலைமை தாங்கினார். தாசில்தார் கனிமொழி முன்னிலை வகித்தார். ஏ.டி.எஸ்.பி., திருமால், டி.எஸ்.பி., நந்தகுமார், இந்து அறநிலைய துறை அலுவலர்கள் மற்றும் இரு தரப்பு முக்கியஸ்தர்கள் பங்கேற்றனர்.

கூட்டத்தில், கோவிலை திறந்து சமாதானமாக வழிபட இரு தரப்பினரும் ஒப்பு கொண்டனர். யாரும், யாரையும் தடை செய்ய மாட்டோம். கோர்ட் உத்தரவை பின்பற்றி நடப்பதாக உறுதியளித்தனர்.

தொடர்ந்து ஆர்.டி.ஓ., முருகேசன் பேசுகையில், 'கோவில் வளாகத்தில் உள்ள முட்புதர்களை அகற்றி சுத்தம் செய்தல் உள்ளிட்ட சில முன்னேற்பாடு பணிகளை செய்ய வேண்டியுள்ளது.

மேலும், சட்ட ஒழுங்கு பிரச்னை ஏற்படாமலிருக்க பாதுகாப்பு கருதி கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த இருப்பதால் சில நாட்கள் கால அவகாசம் தேவைப்படுகிறது. இப்பணிகள் முடிந்ததும், கோவில் திறக்கும் தேதி பின்னர் அறிவிக்கப்படும். அதன் பின், அனைவரும் கோவிலுக்கு சென்று சுவாமியை வழிபடலாம்' என்றார்.

Advertisement