பிளாட் தருவதாக ரூ.8 லட்சம் மோசடி; ரியல் எஸ்டேட் தொழில் அதிபர் கைது

அரியாங்குப்பம் : பிளாட் தருவதாக ரூ. 8 லட்சம் மோசடி செய்த ரியல் எஸ்டேட் அதிபரை போலீசார் கைது செய்தனர்.

புதுச்சேரி, அரியாங்குப்பம், மணவெளியை சேர்ந்தவர் மண்ணாங்கட்டி மகன் ராஜகணபதி (எ) விக்கி, 25; ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார்.

இவர், தொண்டமாநத்தம் பாலமுருகன், 40; என்பவரிடம், கடந்த செப்., மாதம் ஒரு லட்சத்து 10 ஆயிரம் ரூபாயை, கடனாக வாங்கி ஜிபே மூலம், தனது நண்பர் கார்த்திக்ராஜா வங்கி கணக்கிற்கு அனுப்பினார்.

இதை தொடர்ந்து, கடந்த பொங்கல் பண்டிகைக்கு, பொதுமக்களுக்கு இலவசமாக வழங்க மூன்று லாரிகள் கரும்பு வாங்கவும், பிற செலவுகளுக்காக பாலமுருகனிடம் இருந்து பல தவணைகளில் ரூ. 8 லட்சம் கடன் வாங்கினார்.

பணத்தை திருப்பிக்கேட்டபோது, ரூ. 8 லட்சத்திற்கு வட்டியுடன் சேர்த்து 12 லட்சம் தருவதாகவும், இல்லையென்றால் சோரப்பட்டு, தவளக்குப்பம் பகுதிகளில் உள்ள இடம் அல்லது சேலியமேட்டில் உள்ள 28 ஏக்கரில் 5 ஏக்கர் நிலம் தருவதாக ராஜகணபதி கூறினார்.

ராஜகணபதி, நிலம் தராததால் பாலமுருகன் பணத்தை கேட்டார். ஆத்திரமடைந்த, அவர், தனக்கு அரசியல் செல்வாக்கு உள்ளதால் ஒன்றும் செய்ய முடியாது. தான் வைத்துள்ள துப்பாக்கியால் சுட்டு கொலை செய்து விடுவேன். வட மாநில ஆட்களை வைத்து குடும்பத்தோடு கொலை செய்து விடுவேன் என, பாலமுருகனை மிரட்டினார்.

புகாரின்பேரில், அரியாங்குப்பம் இன்ஸ்பெக்டர் கலைச்செல்வம், சப் இன்ஸ்பெக்டர் கதிரேசன் மற்றும் போலீசார் வழக்கு பதிந்து, ராஜகணபதியை, நேற்று கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Advertisement