தமிழகத்தில் மத்திய அரசின் திட்டங்கள்: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்டியல்

10

புதுடில்லி: சென்னையில் நடந்த மத்திய பட்ஜெட் தொடர்பான ஆலோசனை கூட்டத்தில், தமிழகத்தில் மத்திய அரசு சார்பில் நடந்து வரும் பணிகளை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்டியலிட்டு பேசினார்.

நிர்மலா சீதாராமன் பேசுகையில்,

கடந்த பத்தாண்டுகளில், தமிழகத்தில்

* ஜன் தன் திட்டம்: 1.7 கோடி வங்கிக் கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன. (58% பெண்கள்)

* பிரதமரின் வீட்டு வசதித் திட்டம்: 12 லட்சத்திற்கும் மேற்பட்ட வீடுகள் கட்டப்பட்டுள்ளன

* தூய்மை பாரத திட்டம்: 59 லட்சத்திற்கும் மேற்பட்ட கிராமப்புற வீடுகளில் கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளன.

* ஜல் ஜீவன் இயக்கம்: 89 லட்சம் கிராமப்புற வீடுகளுக்கு குழாய் வழி குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன.

* பிரதமரின் உஜ்வாலா திட்டம்: 41 லட்சத்திற்கும் மேற்பட்ட சமையல் எரிவாயு இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன

* ஆயுஷ்மான் பாரத் திட்டம்: ஆண்டுக்கு ஒரு குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் என்ற விகிதத்தில் 79 லட்சத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு சுகாதார காப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த பத்தாண்டுகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள் உள்கட்டமைப்பு பணிகள்:

* 4,100 கி.மீ.க்கும் அதிகமான தேசிய நெடுஞ்சாலைகள் கட்டப்பட்டுள்ளன.

* 2014 முதல் 1,303 கி.மீ.க்கும் அதிகமான புதிய ரயில் பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் சுமார் 2,242 கி.மீ. ரயில் வலையமைப்பு மின்மயமாக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் 94% ரயில் பாதைகள் மின்மயமாக்கப்பட்டுள்ளன.

* 54 கி.மீ.க்கும் அதிகமான தொலைவுக்கு சென்னை மெட்ரோ ரயில் இயக்கப்பட்டு வருகின்றன.

* உதான் திட்டத்தின் கீழ், சேலம் விமான நிலையம் செயல்பாட்டுக்கு வந்துள்ளது, அதே நேரத்தில் நெய்வேலி மற்றும் வேலூரில் கட்டுமானப் பணிகள் நிறைவடைந்துள்ளன.

கூடுதலாக, பிரதமர் மோடி தலைமையிலான அரசு, மாநிலங்களுக்கு மூலதன செலவினத்திற்கான சிறப்பு உதவித் திட்டத்தின் மூலம் மூலதனச் செலவில் மாநில அரசுகளின் முதலீட்டை ஆதரித்துள்ளது. இதில் உட்கட்டமைப்பு திட்டங்களுக்கு 50 ஆண்டு வட்டி இல்லாத கடன்கள் வழங்கப்படுகின்றன. இந்த நிதியுதவி, நிதி ஆணையத்தின் பரிந்துரைகள் இல்லாமலேயே வழங்கப்பட்டுள்ளன.

* 2020-21 மற்றும் 2023-24 க்கு கலக்கட்டத்தில் தமிழகத்திற்கு ரூ.14,900 கோடிக்கு மேல் வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் அவர் பேசியதாவது:வேலைவாய்ப்புக்கு என திட்டங்கள் கொண்டு வரப்பட்டு உள்ளன. அடுத்த 25 ஆண்டுகளில் வளர்ந்த நாடாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. அடுத்த 25 ஆண்டுகளுக்கான அடித்தளமாக பட்ஜெட் அமைந்துள்ளது. நாட்டின் பொருளாதாரத்திற்கு வெளியில் இருந்து வரும் பாதிப்புகளை கருத்தில் கொண்டு நடவடிக்கை எடுத்து உள்ளோம். உள்நாட்டில் என்னென்ன பாதிப்புகள் வரக்கூடும் என்பதை கணித்து திட்டமிட்டு உள்ளோம் .


நாடு முழுவதும் ஒவ்வொரு மாவட்டத்திலும் புற்றுநோய் சிகிச்சை பராமரிப்பு மையங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்நோய் ஏழை, பணக்காரர் என பேதமின்றி அனைத்து குடும்பங்களையும் பாதிக்கிறது. அவர்களுக்கு சிகிச்சை அளிப்பதுடன், அதற்கு பிறகு பராமரிப்புக்கு என மையம் அமைக்கப்படுகிறது. இந்த நடவடிக்கை மனதிற்கு திருப்தி அளிக்கிறது. இதற்காக பிரதமர் மோடிக்கு நன்றி .

யாரோ என்னை கேட்டனர். வருமான வரி குறித்து எந்த எண் என அறிவிக்க கஷ்டப்பட்டீர்களா? யாரை ஏற்றுக் கொள்ள செய்வதில் கடினமாக இருந்தது என கேட்டனர். பிரதமரை ஏற்கவைப்பதில் கடினம் இல்லை. அமைப்புகளை ஏற்க வைப்பதில் தான் கடினமாக இருந்தது. வெளியில் இருந்த யூகங்கள் போன்று, 8,9 ,10 லட்சம் இருந்தது போதாதா என கேள்விகள் வந்தன.
மற்றவர்களை ஏற்க வைப்பதில் தான் சவால் இருந்தது. பிரதமர் ஆதரவு அளித்தார். அவருக்கு தான் நன்றிக்கடன் பட்டு உள்ளேன். 12 லட்ச ரூபாய் வரை விலக்கு அளித்தது மகிழ்ச்சி அளிக்கிறது.

நாட்டில் விவசாயத்தை நம்பி நிறைய பேர் உள்ளனர். நிலத்தில் ஒரு மனிதன் செய்ய வேண்டிய வேலையை 3 பேர் செய்கின்றனர். இதனை வேலைவாய்ப்பின்மை என்போம். அதனை மாற்றி கிராமப்புறத்தில் வேறு வேலைவாய்ப்பை அளிக்க முயற்சித்தோம்.


தமிழகத்தில் துறைமுகங்களுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். மத்திய அரசின் செயலை திசை திருப்பும் வேலையை தான் இங்கு செய்கிறார்கள். மும்மொழிக் கொள்கை, தொகுதி மறுவரையறை குறித்து பேசி திசை திருப்புகிறார்கள். பட்ஜெட்டை பற்றி பேச வந்துள்ளேன். இங்கு நடக்கும் ஊழல் பற்றி பேச வரவில்லை. சாதாரண மக்களுககு இன்னும் பிரச்னைகள் இருந்து கொண்டு தான் இருக்கின்றன.சாதாரண மக்களுக்கு பிரச்னை இருந்து கொண்டு தான் உள்ளன. இவ்வாறு நிர்மலா சீதாராமன் பேசினார்.

Advertisement