பிரீமியர் லீக் கிரிக்கெட் : முத்திரை பதித்த கோலி; பெங்களூரு அணிக்கு முதல் வெற்றி

கோல்கட்டா: சால்ட் மற்றும் கோலியின் சிறப்பான தொடக்கத்தால் கோல்கட்டா அணிக்கு எதிரான போட்டியில் பெங்களூரு அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.



18வது பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் தொடக்க விழா கோலாகல கலை நிகழ்ச்சியுடன் தொடங்கியது. பின்னணி பாடகி ஸ்ரேயா கோஷல் பாடல் பாடி அசத்தினார். அதைத் தொடர்ந்து, நடிகை திஷா பதானி நடன நிகழ்ச்சி நடைபெற்றது. தொடக்க நிகழ்ச்சியில், கோல்கட்டா அணியின் உரிமையாளரும், நடிகருமான ஷாருக்கானும் கலந்து கொண்டார். அவருடன் நட்சத்திர வீரர் விராட் கோலி நடனமாடி ரசிகர்களை உற்சாகப்படுத்தினார்.

பின்னர், டாஸ் வென்ற பெங்களூரு அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.போட்டி தொடங்கியதும் முதல் ஓவரிலேயே பெங்களுரு அணி கோட்டை விட்டது. ஹசில்வுட் வீசிய முதல் ஓவரின் 3 பந்திலேயே டி காக் கொடுத்த கேட்ச்சை சுயாஷ் ஷர்மா தவறவிட்டார். ஆனால், 5வது பந்திலேயே டி காக்கின் விக்கெட்டை வீழ்த்தினார் ஹசில்வுட். தொடர்ந்து முதல் 3 ஓவர்களை பெங்களூரு பவுலர்கள் சிறப்பாக வீசினார். கோல்கட்டா அணி ஒரு விக்கெட்டுக்கு 9 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது.

ஆனால், கேப்டன் ரஹானே தனது அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்த தொடங்கினார். இதனால், கோல்கட்டா அணி பவர் பிளே முடிவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 60 ரன்களை குவித்தது. அதிரடியாக ஆடிய ரஹானே 25 பந்துகளில் அரைசதம் அடித்தார். மறுமுனையில் ஆடிய சுனில் நரேன், ஆரம்பத்தில் சொதப்பினாலும், போகப் போக அதிரடியை காட்டினார். 10வது ஓவரின் கடைசி பந்தில் நரேன் (44) ரஷிக் சலாம் பந்தில் அவுட்டானர். சுனில் நரேன் அவுட்டான அடுத்த ஓவரிலேயே கேப்டன் ரஹானே (56), க்ருணல் பாண்டியா பந்தில் கேட்ச் கொடுத்து அவுட்டானார். இதைத் தொடர்ந்து வந்த வீரர்கள் பெரியளவில் ரன்களை குவிக்கவில்லை. இளம் வீரர் ரகுவன்சி மட்டும் (30) கொஞ்சம் ரன்களை குவித்தார்.

இறுதியில், 20 ஓவர்கள் முடிவில் கோல்கட்டா அணி 8 விக்கெட் இழப்பிற்கு 174 ரன்கள் சேர்த்தது. பெங்களூரு அணி தரப்பில் க்ருணல் பாண்டியா 3 விக்கெட்டும், ஹசில்வுட் 2 விக்கெட்டும், யாஷ் தயால், ரஷிக் தார் சலாம், சுயாஷ் ஷர்மா தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

தொடர்ந்து, 175 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய பெங்களூரு அணி 16.2 ஓவரில் 3 விக்கெட்டு இழப்பிற்கு 177 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

சால்ட் மற்றும் கோலி அதிரடியாக தொடக்கத்தை கொடுத்தனர். பவர் பிளேவில் விக்கெட் இழப்பிற்கு 80 ரன்கள் சேர்த்தது. இது பவர் பிளேவில் அந்த அணியின் 2வது அதிகபட்ச ஸ்கோராகும். கடந்த ஆண்டு குஜராத்துக்கு எதிராக 92 ரன்கள் குவித்ததே அதிகபட்சமாகும்.

அதிரடியாக ஆடிய சால்ட் 25 பந்துகளில் அரைசதம் அடித்தார். 56 ரன்னில் ஆட்டமிழந்தார். மறுமுனையில் கோலியும் அரைசதம் அடித்தார். அதுமட்டுமில்லாமல், கோல்கட்டா அணிக்கு எதிராக அவர் 1,000 ரன்கள் என்ற மைல்கல்லை எட்டியுள்ளார். இதற்கு முன்பு சென்னை, டில்லி, பஞ்சாப் அணிகளுக்கு எதிராக 1000 ரன்களை கடந்துள்ளார்.

இப்படியே ஆடினால் பெங்களூரு அணி எளிதில் வெற்றி பெறும்.

Advertisement