'அமெரிக்க வரியால் 'பிரிக்ஸ்'க்கு பாதிப்பில்லை' ஜெய்சங்கர் பளிச் பதில்

புதுடில்லி:அமெரிக்கா பரஸ்பர வரி விதிப்பை அமல்படுத்தப் போவதாக மிரட்டி வருவதால், பிரிக்ஸ் அமைப்பு கலகலத்துள்ளதா என்ற கேள்விக்கு, நம் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், ''அமைப்பின் வரலாறு மற்றும் அதன் நோக்கம் பலமுனை ஒருங்கிணைப்பை உறுதி செய்கிறது,'' என, பதிலளித்துள்ளார்.

இந்தியா, பிரேசில், ரஷ்யா, சீனா, தென் ஆப்ரிக்கா அடங்கியது, பிரிக்ஸ் என்ற அமைப்பு. இந்த நாடுகளுக்கு இடையே பொருளாதாரம் உள்ளிட்ட விஷயங்களில் ஒருங்கிணைந்து செயல்படுவது இந்த அமைப்பின் நோக்கம்.

அமெரிக்க அதிபராக கடந்த ஜனவரியில் பதவியேற்ற டொனால்டு டிரம்ப், பல நாடுகளுக்கும் பரஸ்பர வரி விதிப்பதாக மிரட்டி வருகிறார். மேலும், பிரிக்ஸ் அமைப்பில், அமெரிக்க டாலருக்கு மாற்றாக, பொதுவான கரன்சியை உருவாக்குவது தொடர்பாக பேசப்படுவதற்கும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்.

அமெரிக்காவின் மிரட்டலால், பிரிக்ஸ் அமைப்பின் நிலைமை என்ன என, பார்லிமென்டில் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்து, ஜெய்சங்கர் கூறியதாவது:

கடந்த 2006ல் உருவாக்கப்பட்ட இந்த அமைப்பில், பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா ஆகியவை மட்டுமே இருந்தன. 2010ல் தென் ஆப்ரிக்கா இணைந்தது. தற்போது, இந்த அமைப்பில், 11 நாடுகள் உறுப்பினர்களாகவும், ஒன்பது நாடுகள் கூட்டாளி களாகவும் உள்ளன.

பிரிக்ஸ் அமைப்பின் வரலாறு மற்றும் அதன் நோக்கம், உலகளவில் பல நாடுகளில் வரவேற்கப்பட்டு, அவை இணைந்துள்ளன. அதனால், இந்த அமைப்பு தொடர்ந்து விரிவடைந்து வருகிறது.

உலகெங்கும் உள்ள பல பிரச்னைகளுக்கு தீர்வு காண்பது தொடர்பாகவும் இந்த அமைப்பு தொடர்ந்து விவாதித்து வருகிறது. இந்த அமைப்பின் நோக்கமே, பல நாடுகளுக்கு இடையே ஒருங்கிணைந்த நட்பு, ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில் சீர்திருத்தம், வர்த்தக வளர்ச்சி, பருவநிலை மாறுபாட்டில் இணைந்து செயல்படுவது, மனித உரிமை பாதுகாப்பு போன்றவையாகும்.

உலகளாவிய ஒரு நெறிமுறைகளை, வழிமுறைகளை உருவாக்குவதும் இதன் நோக்கமாகும். இவையே, இந்த அமைப்பை இணைக்கும் இழையாக உள்ளன. அதனால், பிரிக்ஸ் அமைப்பு வலுவாக உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement