சுனிதாவுக்கு சொந்த பணத்தை தருவேன் அமெரிக்க அதிபர் டிரம்ப் அதிரடி பதில்

வாஷிங்டன்: விண்வெளி வீராங்கனை சுனிதாவுக்கு கூடுதல் சம்பளத்தை, தன் சொந்தப் பணத்தில் இருந்து தருவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறினார்.
விண்ணில் உள்ள சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்துக்கு எட்டு நாள் பயணமாக, கடந்த ஆண்டு ஜூன் 5ம் தேதி, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சுனிதா வில்லியம்ஸ், விண்வெளி வீரர் புட்ச் வில்மோர் இருவரும் சென்றனர்.
தொழில்நுட்பக் கோளாறால், பூமிக்கு திரும்ப முடியாமல் விண்வெளி மையத்தில் ஒன்பது மாதங்களாக சிக்கிக் கொண்டனர்.
டிராகன் விண்கலம்
ஜனவரியில் அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்ற பின், அவர்களை அழைத்து வர முயற்சி துவங்கியது. தொழில் அதிபர் எலான் மஸ்கின், 'ஸ்பேஸ் எக்ஸ்-'சுக்கு சொந்தமான பால்கன் ராக்கெட் வாயிலாக 'டிராகன்' விண்கலம் விண்ணுக்கு அனுப்பப்பட்டது.
சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோரை ஏற்றிக் கொண்டு கடந்த 19ம் தேதி, அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் டிராகன் விண்கலம் பத்திரமாக தரை இறங்கியது.
இதையடுத்து, விண்வெளியில் ஒன்பது மாதங்களுக்கு மேல் இருந்த சுனிதாவுக்கு கூடுதலாக எவ்வளவு பணம் கிடைக்கும் என்ற விவாதம் எழுந்தது. அமெரிக்காவை பொறுத்தவரை 'நாசா'வில் பணிபுரிபவர்களும், அந்நாட்டின் மத்திய அரசு ஊழியர்கள் தான்.
விடுமுறையில் பணியாற்றினாலோ, பணி நேரத்துக்கு அதிகமாக பணியாற்றினாலோ கூடுதல் சம்பளம் கிடையாது.
விண்வெளிக்கு செல்வது கூட, அலுவலக வேலைக்காக வேறு ஊருக்கு சென்று வருவது போலத்தான் கருதப்படும். இதன்படி, விண்வெளியில் பணி புரிந்ததற்காக ஒரு நாளைக்கு 5 அமெரிக்க டாலர் வீதம், 286 நாட்களுக்கு 1,430 டாலர், அதாவது இந்திய மதிப்பில், 1,22,980 ரூபாய் மட்டுமே கூடுதலாக கிடைக்கும்.
வழக்கமாக சுனிதாவும், வில்மோரும் ஆண்டுக்கு 1.05 கோடி ரூபாய் வரை பெறும் சம்பளத்துடன் இந்த தினப்படி கூடுதலாக வழங்கப்படும்.
இவ்வளவு குறைந்த தொகை குறித்து உலக அளவில் ஆச்சரியமும், விவாதமும் எழுந்துள்ள நிலையில், அதிபர் டிரம்ப் நேற்று வெள்ளை மாளிகையில் பேட்டி அளித்தார்.
9 மாதங்கள்
அவரிடம் இது பற்றி கேட்டபோது, அவர் கூறியதாவது:
எலான் மஸ்க் இல்லையென்றால், விண்வெளி வீரர்கள் அங்கேயே நீண்ட காலம் இருக்க நேரிட்டிருக்கும். வேறு யார் அவர்களை அழைத்து வந்திருக்க முடியும்? அவர் தற்போது நிறைய கஷ்டங்களை சந்தித்து வருகிறார். 9 மாதங்கள் வரை விண்வெளியில் இருந்த அவர்களின் உடல்நிலை மோசமடைந்துள்ளது. அவர்களின் கஷ்டத்தை பார்க்கும்போது, இது பெரிதல்ல.
அவர்களுக்கு விண்வெளியில் கூடுதல் காலம் இருந்ததற்கு கூடுதலாக சம்பளம் வழங்குவது தொடர்பாக யாரும் என்னிடம் இதுவரை சொல்லவில்லை. அப்படி சொன்னால், நான் என் சொந்தப் பணத்தில் இருந்தே எடுத்து தருவேன்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மேலும்
-
சென்னை அணி வெற்றி துவக்கம்: ருதுராஜ், ரச்சின் அரைசதம்
-
திண்டுக்கல் மாவட்ட பா.ஜ., முன்னாள் தலைவர் கைது
-
ரயிலில் கஞ்சா: மதுரைக்காரர்கள் கைது
-
நடைபாதையில் 'தடை' எதற்கு?
-
தமிழகத்திலிருந்து இலங்கைக்கு கடத்தப்பட்ட 85 கிலோ கஞ்சா கட்டைக்காடு பகுதியில் பறிமுதல்
-
காஸ் கசிவால் வீடுகளில் தீவிபத்து பனியன் நிறுவனத்திலும் பரவிய தீ