கவரிங் நகை அடகு வைத்து மோசடி வங்கி அதிகாரி உட்பட 7 பேர் கைது

பாலக்காடு : கூட்டுறவு நகர்ப்புற வங்கியில், கவரிங் நகை அடகு வைத்து, 45.50 லட்சம் ரூபாய் மோசடி செய்த வங்கி அதிகாரி, குடும்பத்தினர் உட்பட ஏழு பேரை போலீசார் கைது செய்தனர்.

கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், ஒற்றைப்பாலம் கூட்டுறவு நகர்ப்புற வாங்கியின், பத்திரிப்பால கிளையில், கடந்த மாதம் உயர் அதிகாரிகள் தலைமையில் ஆடிட்டிங் நடந்தது. அப்போது, கவரிங் நகைகளை அடகு வைத்து, 45.50 லட்சம் ரூபாய் மோசடி நடந்துள்ளது தெரியவந்தது.

வங்கி மேலாளர் புகாரில், கடந்த, 7ல் ஒற்றைப்பாலம் போலீசார் நடத்திய விசாரணையில், வங்கியின் மூத்த கணக்காளர் வெள்ளிநேழியை சேர்ந்த மோகனகிருஷ்ணன், 56, தலைமையில் இந்த மோசடி நடந்தது உறுதி செய்யப்பட்டது.

மோகனகிருஷ்ணன் தலைமறைவானார். கடந்த, 15 நாட்களாக தலைமறைவாக இருந்த மோகனகிருஷ்ணன், அவரது குடும்பத்தை சேர்ந்தவர்களை, தமிழகத்தில் திருப்பூரில் போலீசார் கைது செய்தனர்.

அவர்களிடம் நடத்திய விசாரணையில், பொருளாதார நெருக்கடியில் அவதிப்படும் சகோதரியின் மகன் விவேக் என்பவரை காப்பாற்ற, மோகனகிருஷ்ணன், அவரது குடும்பத்தினர், நண்பர்கள் பெயரில், கூட்டுறவு வங்கியில் கவரிங் நகைகளை அடகு வைத்து, 45.50 ரூபாய் பண மோசடி செய்தது தெரியவந்தது.

மோகனகிருஷ்ணன், அவரது சகோதரி தேங்குறுச்சியைச் சேர்ந்த லட்சுமிதேவி, 60, அவரது கணவர் வாசுதேவன், 64, சகோதரியின் மகன் விவேக், 35, மருமகள் சரண்யா, 30, நண்பர்களான கொல்லத்தைச் சேர்ந்த ஹரிலால், 34, திருவனந்தபுரத்தைச் சேர்ந்த அரவிந்த் தியாகராஜன், 33, ஆகியோரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட ஏழு பேரையும், ஒற்றைப்பாலம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Advertisement