நீதிபதி வீட்டில் பணம் விவகாரம் எதிரொலி; அமளியால் பார்லிமென்ட் ஒத்திவைப்பு

26

புதுடில்லி: டில்லி உயர் நீதிமன்ற நீதிபதி வீட்டில் சாக்கு பையில் பணம் கண்டெடுக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக, எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் பார்லிமென்ட் இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டன.

பட்ஜெட் கூட்டத்தொடரின் முதலாவது அமர்வு கடந்த ஜன.,31 முதல் பிப்.,13 வரை நடந்தது. இரண்டாவது அமர்வு கடந்த மார்ச் 10ம் தேதி துவங்கியது. ஏப்., 4 வரை நடக்க உள்ளது. கூட்டத்தொடர் துவங்கி முதல் நாளில் இருந்து எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.


இந்நிலையில் இன்று (மார்ச் 24) காலை 11 மணிக்கு பார்லிமென்ட் இரு அவைகளும் கூடியது. லோக்சபா கூடியதும் டில்லி உயர் நீதிமன்ற நீதிபதி வீட்டில் சாக்கு பையில் பணம் கண்டெடுக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக, எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் கூச்சல், குழப்பம் நிலவியது.


சபாநாயகர் ஓம் பிர்லா பலமுறை எச்சரித்தும் எம்.பி.,க்கள் கண்டுகொள்ளவில்லை. தொடர்ந்து கூச்சல் எழுப்பிய வண்ணம் இருந்தனர். இதனால் அவையை மதியம் 2 மணி வரை ஒத்திவைத்து சபாநாயகர் ஓம் பிர்லா உத்தரவிட்டார்.


அதேபோல் ராஜ்யசபாவிலும் அவை கூடியதில் இருந்து எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் அமளியில் ஈடுபட்டதால், அவையை மதியம் 2 மணி வரை ஒத்திவைத்து ஜக்தீப் தன்கர் உத்தரவிட்டார்.

Advertisement