வரி கட்டாத கடைகளுக்கு மார்ச் 25 முதல் சீல்

காரைக்குடி, : காரைக்குடி மாநகராட்சியில் வரி செலுத்தாத கடைகள், வணிக வளாகங்களுக்கு மார்ச் 25 முதல் சீல் வைக்கப்படும் என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

காரைக்குடி மாநகராட்சியில் உள்ள 36 வார்டுகளிலும் சொத்து வரி, காலியிட மனை வரி மற்றும் குடிநீர் கட்டணம் உள்ளிட்ட வரிபாக்கிகளை வசூல் செய்யும் பணிகளில் மாநகராட்சி வருவாய் துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

நீண்ட நாட்களாக வரிபாக்கி செலுத்தாத கடைகளுக்கும், காலியிட மனைதாரர்களுக்கும் நோட்டீஸ், ஒலிபெருக்கி, துண்டு பிரசுரம் மூலமும் எச்சரிக்கை விடப்பட்டது. மார்ச் 24 வரி செலுத்துவதற்கு கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வரி செலுத்துபவர்கள் இ சேவை மையங்கள் மற்றும் ஆன்லைன் மூலம் செலுத்த வசதி செய்யப்பட்டுள்ளது. மார்ச் 24ம் தேதிக்குள் வரி பாக்கி செலுத்தாதவர்களின் வணிக வளாகங்களுக்கு சீல் வைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும், வரி செலுத்தாதவர்களின் பெயர் பட்டியல் பொதுமக்களிடம் காட்சிப்படுத்தப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

கமிஷனர் சித்ரா கூறுகை யில், காரைக்குடி மாநகராட்சியில் மொத்தம் 36 ஆயிரத்து 921 சொத்து வரி விதிப்பு உள்ளது. வார்டு 4ல் 90.89 சதவீதமும், வார்டு 8ல் 93.91 சதவீதமும் வசூலிக்கப்பட்டுள்ளது.

குறைந்தபட்சமாக வார்டு 1ல் 64.97 சதவீதமும், வார்டு 10ல் 63.52 சதவீதமும் வார்டு 27ல் 60.78 சதவீதமும் வார்டு 28ல் 69.86 சதவீதமும், வார்டு 33ல் 69.57 சதவீதமும் வசூலாகி உள்ளது. மாநகராட்சியில் மொத்த சொத்து வரி 81.85 சதவீதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

மேலும் ரூ.4 கோடியே 32 லட்சம் வசூலிக்க வேண்டியுள்ளது. மார்ச் 24ம் தேதிக்குள் வரி செலுத்த தவறினால் ஜப்தி நோட்டீஸ் அனுப்பி சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும்.

Advertisement