கோடையை சமாளிக்க வினாடிக்கு 500 கன அடி வீதம் கிருஷ்ணா நதி நீர் திறப்பு

அமராவதி: ஆந்திராவின் கண்டலேறு அணையில் இருந்து முதற்கட்டமாக விநாடிக்கு 500 கன அடி வீதம் தமிழகத்துக்கு கிருஷ்ணா நதி நீர் திறக்கப்பட்டுள்ளது.
சென்னையின் குடிநீருக்காக ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து, தெலுங்கு- கங்கை திட்ட கால்வாய் மூலம் கிருஷ்ணா நதி நீர் வழங்கப்படுகிறது. கண்டலேறு அணையிலிருந்து திறக்கப்படும் கிருஷ்ணா நதி நீர் தமிழக எல்லையான, திருவள்ளூர் மாவட்டம் வழியாக சென்னையை வந்தடையும்.
சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஐந்து நீர்த்தேக்கங்களில் தற்போது 79.4 சதவீதம் தண்ணீர் தேங்கியுள்ளது. பகல் நேர வெப்பம் தொடர்ந்து அதிகரிக்கும் நிலையில், வரும் நாட்களில் இந்த தண்ணீர் அளவு கணிசமாக குறையும். எனவே சென்னை மக்களுக்கு கோடையில் குடிநீர் விநியோகத்தை உறுதி செய்வதற்காக தெலுங்கு கங்கை திட்டத்தில், தண்ணீர் வழங்கும்படி ஆந்திராவிடம் தமிழக நீர்வளத்துறை கோரிக்கை விடுத்தது.
இந்நிலையில், இன்று ஆந்திராவின் கண்டலேறு அணையில் இருந்து கிருஷ்ணா ஆற்றில், முதற்கட்டமாக விநாடிக்கு 500 கன அடி வீதம் தமிழகத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
இந்த தண்ணீர், அடுத்த 4 நாட்களில் தமிழகத்தின் எல்லையான ஊத்துக்கோட்டை ஜீரோ பாயிண்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தண்ணீர் பூண்டி நீர்த்தேக்கத்தில் சேமிக்கப்பட்டு, பின்னர் சென்னையின் குடிநீர் தேவைக்காக பயன்படுத்தப்பட உள்ளது.

