வங்கதேச கிரிக்கெட் முன்னாள் கேப்டனுக்கு மைதானத்தில் நெஞ்சு வலி

டாக்கா: வங்கதேச கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தமீம் இக்பால், மைதானத்தில் இருந்தபோது ஏற்பட்ட நெஞ்சுவலியால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வங்கதேச கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனாக இருந்தவரும் தொலைக்காட்சி வர்ணனையாளருமான தமீம் இக்பால் 36, இவர் இன்று டாக்கா பிரீமியர் லீக் போட்டியின் போது நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

50 ஓவர் டாக்கா பிரீமியர் லீக் (டி.பி.எல்) போட்டியில் முகமதியன் ஸ்போர்டிங் கிளப்பை வழிநடத்திச் சென்ற தமீம், டாஸில் பங்கேற்றார், ஆனால் பின்னர் நெஞ்சு வலி இருப்பதாக கூறினார். மைதானத்தில் ஆரம்ப சிகிச்சைக்குப் பிறகு, அவர் அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார்.

வங்கதேச கிரிக்கெட் வாரியத்தின் மருத்துவ அதிகாரி டெபாஷிஸ் சவுத்ரி கூறியதாவது:

அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. இதுவரை எனக்குத் தெரிந்த விஷயம் என்னவென்றால், அவரது இதயம் சிறப்பாக செயல்படத் தொடங்கியது.

டாக்காவின் புறநகர்ப் பகுதியில் உள்ள சவாரில் உள்ள ஒரு மருத்துவமனையில் தமீம் சிகிச்சை பெற்று வருகிறார்.

தமீமின் திடீர் உடல்நலக் குறைவைத் தொடர்ந்து, அன்றைய தினம் திட்டமிடப்பட்டிருந்த வாரியக் கூட்டத்தை பி.சி.பி ரத்து செய்தது, பல வாரிய உறுப்பினர்கள் அவரைப் பார்க்க மருத்துவமனைக்குச் சென்றனர்.

2007 மற்றும் 2023 க்கு இடையில் அனைத்து விதமான 391 போட்டிகளில் தமீம் வங்கதேசத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தினார்.

அவர் சர்வதேச கிரிக்கெட்டில் 15,000 க்கும் மேற்பட்ட ரன்களை குவித்துள்ளார், மேலும் மூன்று சர்வதேச தர போட்டிகளிலும் சதம் அடித்த ஒரே வங்கதேச வீரர் ஆவார்.

Advertisement