மாணவர்களிடையே ஜாதி மோதல்; கண்டித்து அனுப்பிய நீதிபதி

1

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் முனைஞ்சிப்பட்டியில் அரசு பள்ளி மாணவர்களிடையே ஜாதி ரீதியான மோதல் ஏற்பட்டது. இரண்டு தரப்பிலும் நான்கு மாணவர்களை போலீசார் கைது செய்து இளைஞர் நீதிமன்ற குழுமத்தில் ஒப்படைத்தனர். தேர்வுகள் நடப்பதால் நீதிபதி மாணவர்கள் இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபடக்கூடாது என அறிவுறுத்தி கண்டித்து அனுப்பினார்.


முனைஞ்சிப்பட்டியில் உள்ள குரு சங்கர் அரசு மேல்நிலைப்பள்ளியில் 11ம் வகுப்பு மாணவர்கள், பிளஸ் டூ மாணவர்களை அவதூறாக குறிப்பிடும் வார்த்தைகளை பள்ளி மேஜைகளில் எழுதி வைத்ததாக புகார் எழுந்தது. இதன் காரணமாக 11ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களிடையே மோதல் ஏற்பட்டது. மேலும் இது ஜாதி ரீதியாகத் தீவிரமடைந்தது.



இந்த மோதல் விவகாரத்தில் இரண்டு பிரிவைச் சேர்ந்த நான்கு மாணவர்களை போலீசார் கைது செய்தனர். திருநெல்வேலி இளைஞர் நீதிமன்ற குழுமத்தில் மாணவர்களை போலீசார் ஆஜர்படுத்தினர்.


தற்போது தேர்வுக் காலம் என்பதால் நீதிபதி அவர்களை கண்டித்தார். மேலும் இனி இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபடக்கூடாது என கடுமையாக எச்சரித்தும் அனுப்பினார்.

Advertisement