சவுக்கு சங்கர் வீடு மீது தாக்குதல்: பின்னணியில் செல்வப்பெருந்தகை

18


சென்னை: '' என் வீட்டின் மீதான தாக்குதல் பின்னணியில் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை இருக்கிறார் ,'' என்று யுடியூபர் சவுக்கு சங்கர் கூறினார்.


யுடியூபர் சவுக்கு சங்கர் வீட்டில் நேற்று காலை துப்புரவுப் பணியாளர்கள் என்ற போர்வையில் சென்ற கும்பல் தாக்குதல் நடத்தியது. சாக்கடை கழிவு நீர் மற்றும் மலக்கழிவு நீரை வீட்டிற்குள் ஊற்றி அராஜகம் செய்தனர்.

இதன் பின்னணி பற்றி சவுக்கு சங்கர் கூறியதாவது: தமிழக அரசு, சென்னை குடிநீர் வாரியம் வாயிலாக, துாய்மை பணியாளர்களை தொழில் முனைவோராக மாற்றுவதற்கான, அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடி திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இது உண்மையிலேயே துாய்மை பணியாளர்களுக்கான சிறந்த திட்டம் தான்.


துாய்மை பணியாளர்களுக்கு, 50 சதவீத மானியத்துடன், நவீன கழிவுநீர் அகற்றும் ஊர்திகள் வழங்கப்பட்டுள்ளன. அத்துடன், 213 துாய்மை பணியாளர்களுக்கு கடனுதவியும் வழங்கப்பட்டுள்ளது. ஆனால், இத்திட்டம் உண்மையான பயனாளிகளுக்கு சென்று சேரவில்லை.

தமிழக காங்., தலைவர் செல்வப்பெருந்தகையும் மற்றொரு நபரும், ஒரு நிறுவனத்துடன் ஒப்பந்தம் போட்டு, துாய்மை பணியாளர்களை கணக்கு காட்டி, கழிவுநீர் அகற்றும் ஊர்திகளை பெற்று முறைகேட்டில் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் மாதம், 20 - 50 ஆயிரம் ரூபாய் வரை, துாய்மை பணியாளர்களுக்கு கொடுத்துவிட்டு, கோடிக்கணக்கில் சட்ட விரோதமாக சம்பாதிக்கின்றனர் என்பதை ஆதாரத்துடன், 'வீடியோ' வெளியிட்டு இருந்தேன்.

இதனால், செல்வப்பெருந்தகை துாண்டுதலின்படி, துாய்மை பணியாளர்கள் என்ற போர்வையில், கூலிப்படையினர் என் வீட்டை சூறையாடி உள்ளனர். இதற்கு, சென்னை போலீஸ் கமிஷனர் அருண் உடந்தையாக இருந்துள்ளார். வீடு சூறையாடப்பட்டதால், அதன் உரிமையாளர், 10 நாட்களில் காலி செய்யுமாறு கூறி விட்டார். இச்சம்பவம், தி.மு.க., அரசின் உண்மை முகத்தை வெளிப்படுத்தி உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.


சம்பவம் குறித்து, கீழ்ப்பாக்கம் காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரை சி.பி.சி.ஐ.டி., விசாரணைக்கு அனுப்பி இருப்பதாக டி.ஜி.பி., அலுவலகம் தெரிவித்துள்ளது.

Advertisement