10ம் வகுப்பு அரசு தேர்வு வினாத்தாள் கசிவு: தெலுங்கானாவில் 5 பேர் கைது

ஐதராபாத்: தெலுங்கானாவில் 10ம் வகுப்பு தெலுங்கு (எஸ்.எஸ்.சி) வினாத்தாள் கசிந்ததாக ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர்.

தெலுங்கானாவின் நல்கொண்டா மாவட்டத்தில் 10ம் வகுப்பு (எஸ்எஸ்சி) வாரியத் தேர்வின் தெலுங்கு வினாத்தாள் கசிந்ததாக புகார் எழுந்தது. இது குறித்து நல்கொண்டா துணை காவல் கண்காணிப்பாளர் (டிஎஸ்பி) சிவராம் ரெட்டி கூறியதாவது:
மார்ச் 21ம் தேதி, நல்கொண்டா மாவட்டத்தின் நக்ரேகல் நகரில் உள்ள அரசு நடத்தும் பெண்கள் குடியிருப்புப் பள்ளியின் (தேர்வு மையம்) சுவரில் ஏறி ஒரு மாணவர் தனது மொபைல் போனைப் பயன்படுத்தி ஒரு மாணவியிடமிருந்து வினாத்தாளை புகைப்படம் எடுத்துள்ளான்.

இதில் தொடர்புடையவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். குற்றம் சாட்டப்பட்டவர்களிடமிருந்து ஒரு கார், ஐந்து மொபைல் போன்கள் மற்றும் பணம் பறிமுதல் செய்யப்பட்டன.

தேர்வுத்தாளின் நகல் எடுத்த பிரம்மதேவர ரவிசங்கர், தேர்வுக்கூடத்திற்குள் நுழைந்து புகைப்படம் எடுத்த ஒரு மைனர் ஆகியோரும் கைது செய்யப்பட்டு உள்ளூர் நகராட்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். ஐந்து பேர் நல்கொண்டா சிறைக்கு அனுப்பப்பட்டனர். அதே நேரத்தில் மைனர் சிறுவன் ஹைதராபாத்தில் உள்ள சிறார் காப்பகத்திற்கு அனுப்பப்பட்டான்.

தேர்வு மைய தலைமை கண்காணிப்பாளர் பொதுலு கோபால் மற்றும் துறை அதிகாரி ராம்மோகன் ரெட்டி ஆகியோரை மாவட்ட அதிகாரிகள் பணியிலிருந்து நீக்கினர்.
கண்காணிப்பாளர் சுதாராணி அலட்சியத்திற்காக இடைநீக்கம் செய்யப்பட்டார். தேர்வுகளின் முதல் நாளிலேயே வினாத்தாள் கசிந்ததை தொடர்ந்து முன்னேற்பாடுகள் கடுமையாக செய்யப்பட்டு வருகின்றன.

இவ்வாறு சிவராம் ரெட்டி கூறினார்.

Advertisement