முதல்வரின் உயர்கல்வி நிதி உதவி பெற தகுதியானவர்கள் விண்ணப்பிக்க அழைப்பு

நாமக்கல்: 'முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து தொழிற்கல்விக்காக வழங்கப்படும், உயர்கல்வி உதவித்தொகை பெறுவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன' என, நாமக்கல் கலெக்டர் உமா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை: முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து, தொழிற்கல்வி பயிலும் ஏழை மாணவர்களுக்கு, அவர்களின் படிப்பை தொடர, ஒவ்வொரு ஆண்டும் மிகவும் ஏழ்மை நிலையில் உள்ள ஏழை குடும்பங்களை சேர்ந்த மாணவர்களுக்கு, அவர்கள் படிக்கும் காலத்தில், ஒரு முறை மட்டும், 50,000 ரூபாய் வழங்கும் திட்டம், தமிழக அரசால் நடைமுறைபடுத்தப்பட்டு வருகிறது.

இத்திட்டத்தில் பயன்பெற, அரசு மூலம் நடத்தப்படும் சிங்கிள் விண்டோ முறையில், தொழிற்கல்வி சேர்க்கை பெற்றிருக்க வேண்டும். நிர்வாக ஒதுக்கீட்டில் சேர்க்கை பெறும் மாணவர்கள், நிதி உதவி பெற இயலாது. தமிழகத்தில் இருப்பிடச்சான்று பெற்றவராக இருக்க வேண்டும். குடும்ப ஆண்டு வருமானம், 72,000 ரூபாய்க்கு மிகாமல் இருக்க வேண்டும். முதல் தலைமுறை பட்டதாரியாக இருந்து, அதற்கான கல்வி கட்டண சலுகை பெற்றிருக்க கூடாது. போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித்தொகை பெற்றிருக்க கூடாது. 7.5 சிறப்பு ஒதுக்கீட்டின் வழியாக சேர்க்கை பெறும் அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் கல்வி உதவித்தொகை உள்ளிட்ட வேறு பயன்கள் பெற்றிருக்ககூடாது.

இந்த தகுதியுடைய தொழிற்கல்வி பயிலும் மாணவ மாணவியர், முதல்வரின் உயர்கல்வி நிதியுதவியை பெறலாம். தகுதியானவர்கள், நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள சமூக பாதுகாப்பு திட்ட (ஜி பிரிவு) பிரிவில் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அளித்து பயன்பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement