கோபி அருகே கழுத்தை அறுத்து கொண்ட தொழிலாளியின் தாயார் பிணமாக மீட்பு

கோபி: கோபி அருகே ஆண்டிபாளையத்தை சேர்ந்த கூலி தொழிலாளி சரவணக்குமார், 47; இவரின் மனைவி, சாந்தி, 40; கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், இரு குழந்தைகளுடன் ஐந்து ஆண்டுகளாக தனியாக வசிக்கிறார்.

தனது பெற்றோர் வீட்டில் வசித்த சரவணக்குமார், நேற்று முன்தினம் மாலை, சாணார்புதுார் பஸ் ஸ்டாப்பில், கழுத்தில் ரத்த காயங்களுடன் அமர்ந்திருந்தார். கடத்துார் போலீசார் அவரை மீட்டு கோபி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கிருந்து பெருந்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இந்நிலையில் அவரது தாய் ராமாயாள், 70, அதே பகுதியில் உள்ள கிணற்றில் கிடப்பதாக சரவணக்குமார், காகிதத்தில் நேற்று எழுதி கொடுத்துள்ளார். இதையடுத்து சாணார்புதுாரில் கிணற்றில் மிதந்த ராமாயாளின் உடலை, நம்பியூர் தீயணைப்பு துறையினர் நேற்று காலை மீட்டனர். இதுகுறித்து சரவணக்குமாரின் தந்தை சுப்பிரமணியம், 75, கடத்துார் போலீசில் புகாரளித்தார்.

இதனிடையே போலீசார் விசாரணையில், சரவணக்குமார் தனக்குத்தானே கத்தியால் கழுத்தை அறுத்து கொண்டது தெரியவந்தது. மகனின் வாழ்க்கையை எண்ணி மனவேதனையில் இருந்த ராமாயாள், ஏற்கனவே கீழ்பவானி வாய்க்காலில் குதித்துள்ளார். அப்போது உறவினர்கள் மீட்டுள்ளனர். இந்நிலையில் கிணற்றில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அதேசமயம் சரவணக்குமார் எதற்காக, தனக்குத்தானே கழுத்தை அறுத்து கொண்டார், தாய் ராமாயாள் உடல் கிணற்றில் கிடந்ததற்கான காரணம், அவர் தற்கொலை செய்து கொண்டாரா என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Advertisement