அதிபர் டிரம்ப் அறிவித்த 'கோல்டு கார்டு' திட்டத்திற்கு அமோக வரவேற்பு

வாஷிங்டன்:அமெரிக்காவில் நிரந்தரமாக வசிக்க அனுமதிக்கும் கோல்டு கார்டு திட்டத்தை, அதிபர் டொனால்டு டிரம்ப் அறிமுகம் செய்துள்ள நிலையில், அதற்கு கடும் வரவேற்பு ஏற்பட்டுள்ளது. முதல் நாளில் மட்டும் 1,000 கோல்டு கார்டுகள் கேட்டு பணம் செலுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து அமெரிக்க வர்த்தக அமைச்சர் ஹோவர்டு லுட்னிக் தெரிவித்ததாவது:

அமெரிக்காவில் காலவரம்பின்றி வசிக்க அனுமதிக்கும் கோல்டு கார்டு அறிமுகமாகிறது. இதற்கான மென்பொருளை தொழிலதிபரும் அரசின் சிக்கன நடவடிக்கை குழு தலைவருமான எலான் மஸ்க் வடிவமைத்து வருகிறார்.

இன்னும் இரண்டு வாரங்களில் மென்பொருள் தயாராகி விடும். அதிபர் டிரம்ப் இதுபற்றி அறிவித்த முதல் நாளிலேயே 1,000 கோல்டு கார்டுகள் விற்பனையாகி விட்டன.

உலகம் முழுவதும் கிட்டத்தட்ட 3.70 கோடி பேர் இந்த கோல்டு கார்டை வாங்கும் வசதி படைத்தவர்களாக உள்ளனர். எனவே, 10 லட்சம் கோல்டு கார்டுகளை எளிதாக விற்பனை செய்ய முடியும் என அதிபர் டிரம்ப் கருதுகிறார்.

இதன் வாயிலாக, பல நாடுகளில் இருந்து, அமெரிக்காவில் வசிக்க விரும்பும் வசதி படைத்தவர்களும், நெருக்கடி நிலையை சந்திப்பவர்களும் வருவார்கள். குற்றவாளிகள், தீயவர்கள் என தெரிய வந்தால், கோல்டு கார்டை ரத்து செய்யும் அதிகாரம் அரசிடம் இருப்பதால், நல்லவர்களாக, சட்டத்தை மதிப்பவர்களாக இருப்பது அவசியம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

கார்டு விலை ரூ.40 கோடி

கோல்டு கார்டு வாங்குவோர், அமெரிக்காவில் நிரந்தரமாக வசிக்கலாம்

ஒரு கோல்டு கார்டின் விலை, கிட்டத்தட்ட 40 கோடி ரூபாய்

கிரீன் கார்டுக்கு மாற்றாக இந்த புதிய கோல்டு கார்டு இருக்கும்

குடியுரிமை பெற்றால், வரிவிதிப்புகள் பொருந்தும் என்பதால், அதை பெறாமலும் வசிக்கலாம்

சர்வதேச வரிவிதிப்பு கருதி குடியுரிமை பெறுவதை தவிர்ப்பவர்களுக்கு, கோல்டு கார்டு உதவும்.

Advertisement