ஆம்னி பஸ்சில் நகை, பணம் திருடிய கண்டக்டர் கைது

உளுந்துார்பேட்டை; உளுந்துார்பேட்டை அருகே ஆம்னி பஸ்சில் நகை, பணம் திருடிய கண்டக்டரை போலீசார் கைது செய்தனர்.

சென்னை காட்டுப்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் ராமு மனைவி பத்மா, 55; இவர் தேவகோட்டையில் இருந்து கடந்த 15ம் தேதி இரவு சென்னைக்கு தனியார் ஆம்னி பஸ்சில் சென்று கொண்டிருந்தார்.

உளுந்துார்பேட்டை அடுத்த பெரியகுப்பம் அருகே ஓட்டலில் பஸ் நின்றது. பத்மா டீ குடித்துவிட்டு பஸ்சில் ஏறி, தனது கைப்பையை பார்த்தபோது 4 கிராம் நகை, 2000 ரூபாய் வைத்திருந்த மணி பர்ஸ் திருடு போனது தெரிய வந்தது.

இது குறித்து அவரது கணவர் ரமேஷ் நேற்று, திருநாவலுார் போலீசில் புகார் அளித்தார்.

போலீசார், ஆம்னி பஸ் நின்ற ஓட்டலில் விசாரணைக்காக சென்றபோது, தனியார் ஆம்னி பஸ் நிறுத்தம் பகுதியில் சந்தேக நபர் ஒருவர், அங்கு வரும் ஒவ்வொரு ஆம்னி பஸ்களிலும் ஏறி இறங்குவதை பார்த்து, அந்த நபரை பிடித்து விசாரித்தனர்.

அவர், பெரம்பலுார் மாவட்டம், மேலப்புலியூரை சேர்ந்த கருப்பசாமி மகன் நிக்காஸ், 18; தனியார் ஆம்னி பஸ்சில் கண்டக்டராக வேலை செய்து வந்துள்ளார். கடந்த 2 மாதங்களுக்கு முன் வேலையை விட்டு நிறுத்தியுள்ளனர்.

கண்டக்டராக வேலை செய்த போது தனியார் ஆம்னி பஸ்களில் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வந்துள்ளார். கடந்த 15ம் தேதி இரவு பத்மாவின் நகை, பணத்தை திருடியதை ஒப்புக் கொண்டார்.

அதன் பேரில் போலீசார் வழக்குப் பதிந்து நிக்காசை கைது செய்து 4 கிராம் நகையை பறிமுதல் செய்தனர்.

Advertisement