பாக்.,கில் இருப்பதை போல் உணர்கிறோம்: பக்வந்த் மன் அரசை விமர்சித்த ஆம் ஆத்மி எம்எல்ஏ.,

1

சண்டிகர்: பஞ்சாபில் முதல்வர் பக்வந்த் மன் தலைமையிலான ஆம் ஆத்மி அரசை, அக்கட்சி எம்.எல்.ஏ., ஒருவரே சட்டசபையில், ' நாங்கள் பாகிஸ்தானில் வசிப்பதை போல் உணர்கிறோம்' விமர்சித்து பேசினார். மற்றொரு எம்.எல்.ஏ.,வும் விமர்சித்து பேசியது அம்மாநில அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


பஞ்சாபின் மோகா மாவட்டத்தில் உள்ள தரம்கோட் சட்டசபை தொகுதி எம்.எல்.ஏ., ஆக இருப்பவர் தேவிந்தர் ஜித் சிங் லட்டி. இவர் சட்டசபையில் பேசும்போது, ' தரம்கோட்டில் உள்ள ஆரம்ப சுகாதார மையத்தை மேம்படுத்தும் திட்டம் ஏதும் மாநில அரசிடம் உள்ளதா?' எனக்கேள்வி எழுப்பினார்.'அப்படி ஒரு திட்டம் ஏதும் அரசின் பரிசீலனையில் இல்லை,' என சுகாதாரத்துறை அமைச்சர் பல்பீர் சிங் தெரிவித்தார்.


இதன் பிறகு தேவிந்தர்ஜித் சிங் லட்டி கூறுகையில்,' மோகா மாவட்டத்தை மாநில அரசு இரண்டாம் தர குடிமக்களாக நடத்துகிறது. கடந்த 3 ஆண்டுகளில் சுகாதாரம் தொடர்பான திட்டங்கள் ஏதும் இல்லை. இந்த வேறுபாடு காட்டப்படுவது ஏன்? மோகா பஞ்சாபின் அங்கமாக உள்ளதா? இல்லையா ? நாங்கள் பாகிஸ்தானில் வாழ்வதை போல் உணர்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.


முன்னதாக அக்கட்சியை சேர்ந்த மற்றொரு எம்.எல்.ஏ., குல்வந்த் சிங் பஜிஹரும், மாநில அரசை விமர்சித்து பேசினார். தனது தொகுதியில் உள்ள 3 சுகாதார நிலையங்களில் டாக்டர்கள் இல்லை எனக் குற்றம்சாட்டினார். இது அம்மாநில அரசியல் வட்டாரங்களில் பேசு பொருளாக மாறி உள்ளது.

Advertisement