சிறுவர்களால் நிகழும் சாலை விபத்துக்களில் தமிழகம் முதலிடம்; அதிர்ச்சி தகவல்

11



புதுடில்லி: 18 வயதுக்கு குறைவானோர் வாகனங்களை இயக்கியதால் ஏற்பட்ட விபத்துக்களில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. கடந்த 2023-24ம் ஆண்டுகளில் மட்டும் தமிழகத்தில் 2,063 விபத்துக்கள் பதிவாகியுள்ளன.

நாடு முழுவதும் நிகழ்ந்த சாலை விபத்துக்கள் மற்றும் போக்குவரத்து விதிமீறல்கள் குறித்த விபரங்களை மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை சார்பில் பார்லிமென்டில் தாக்கல் செய்த அறிக்கையில் தெரிய வந்துள்ளது.

அதில், நாடு முழுவதும் 2023-24ம் நிதியாண்டில் சிறுவர்கள் வாகனங்கள் ஓட்டிச் சென்றதால், 11,890 சாலை விபத்துக்கள் நிகழ்ந்துள்ளன. அதிகபட்சமாக தமிழகத்தில் 2,063 விபத்துக்கள் நிகழ்ந்துள்ளன. மத்திய பிரதேசம் மற்றும் மஹாராஷ்டிராவில் 1,000க்கும் மேற்பட்ட விபத்துக்கள் பதிவாகியுள்ளன. கேரளாவில் 645 விபத்துங்கள் அரங்கேறியுள்ளன. லட்சத்தீவில் மைனர்களால் எந்த விபத்துக்களும் பதிவாகவில்லை.

நாடு முழுவதும் போக்குவரத்து விதிகளை மீறி வாகனம் ஓட்டிய 18 வயதுக்கும் குறைவான சிறுவர்களிடம் இருந்து ரூ.48 லட்சம் வசூலிக்கப்பட்டுள்ளது. இதில், வாகனங்களின் உரிமையாளர்கள், ஓட்டுநர் உரிமம் இல்லாதவர்கள் அல்லது சிறுவர்களிடம் வாகனங்களை கொடுத்து ஓட்ட அனுமதித்த வழக்குகளே அதிகமாகும். அதிகபட்சமாக பீஹாரில் ரூ.44.27 லட்சம் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது, இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement