டில்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா-இ.பி.எஸ்., சந்திப்பு: 2 மணி நேரம் நீடித்தது

33

புதுடில்லி: டில்லி சென்றுள்ள அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை, அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார். சுமார் இரண்டு மணி நேரம் நடந்த இந்த சந்திப்பின் போது அ.தி.மு.க., மூத்த தலைவர்கள், எம்.பி.,க்கள் உடன் இருந்தனர்.


வரும் 2026ம் ஆண்டு தமிழக சட்டசபைக்கு தேர்தல் நடக்க உள்ளது. ஓராண்டு உள்ள நிலையில், தமிழக அரசியல் களத்தில் எந்த கட்சிகள் யாருடன் கூட்டணி என்பது பற்றிய கணிப்புகள் தொடர்ந்து வெளியாகி வருகின்றன.ஆளும்கட்சியான தி.மு.க., தற்போதுள்ள கூட்டணியை தக்க வைத்துக் கொள்ளலாம் என்று பேச்சுகள் தொடரும் நிலையில், பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க., என்ன செய்ய உள்ளது என்பதும் தான் அனைவரின் கேள்வியாக உள்ளது.

இந்த பரபரப்பான சூழ்நிலையில், அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., டில்லி சென்றார். டில்லியில் அமித்ஷாவை சந்திக்க உள்ளீர்களா என்ற கேள்விக்கு பதிலளித்த இ.பி.எஸ்., கட்சியின் தலைமை அலுவலகத்தை பார்வையிட வந்ததாக கூறியிருந்தார்.


இந்நிலையில், இரவு 8 மணிக்கு மேல் அமித்ஷாவை, அவரது இல்லத்தில் இ.பி.எஸ்., சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது அ.தி.முக., மூத்த நிர்வாகிகள் சி.வி.சண்முகம், தம்பிதுரை, வேலுமணி, முனுசாமி உள்ளிட்டோர் உடன் இருந்தனர். இந்த சந்திப்பு சுமார் 2 மணி நேரம் நீடித்தது. இந்த சந்திப்பின் போது, அமித்ஷாவும் - இ.பி.எஸ்., ம் தனியே 15 நிமிடங்கள் பேசினர்.

தே.ஜ., ஆட்சி



இந்த சந்திப்பு நடந்த நிலையில், அமித்ஷா ராஜ்யசபாவில் ஆற்றிய உரை குறித்த வீடியோ வெளியிடப்பட்டது.

அத்துடன்,2026ல் தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு அமைந்த பின்பு, மது வெள்ளமும், ஊழல் புயலும் முடிவுக்கு வந்துவிடும் என பதிவிடப்பட்டு இருந்தது.

Advertisement