மோகன்லால் படம் பார்க்க கல்லுாரிக்கு விடுமுறை

பெங்களூரு : மலையாள நடிகரும், இயக்குநருமான பிருத்விராஜ் முதன் முதலாக இயக்கிய திரைப்படம் லுாசிபர். இதில் ஹீரோவாக மோகன்லால் நடித்திருந்தார். இப்படம் பெரும் வெற்றி பெற்றது. இப்படத்தின் இரண்டாம் பாகத்தை, தற்போது பிருத்விராஜ் இயக்கியுள்ளார்.

மோகன்லால் நடிப்பில், எல்2 எம்புரான் என்ற இந்த படம் நாளை வெளியாகிறது. இத்திரைப்படத்தை காண, பெங்களூரு ராஜராஜேஸ்வரி நகரில் உள்ள, 'குட் ஷெப்பர்டு இன்ஸ்டிடியூட்' கல்லுாரி, மாணவர்களுக்கு விடுமுறை அளித்துள்ளது.

இது தொடர்பாக, கல்லுாரி நிர்வாக இயக்குநர் ஜான் கூறியதாவது:

நான், மோகன்லாலின் தீவிர ரசிகன். முதல் நாளே அவரின் படத்தை குடும்பத்துடன் பார்த்து விடுவேன். எல்2 எம்புரான் திரைப்படத்துக்கு டிக்கெட் கிடைக்கவில்லை என்று மாணவர்கள் கூறினர்.

இன்று கல்லுாரி பட்டமளிப்பு விழா நடக்கிறது. இதில், கேரளாவை சேர்ந்த மாணவர்கள், அவர்களின் பெற்றோர் பங்கேற்கின்றனர். இதை கல்லுாரி விழாவாக கொண்டாட, நாளை ராஜராஜேஸ்வரி நகரில் உள்ள ஒய்.ஜி.ஆர்., மாலில் இரண்டு திரையரங்கில், தலா 251, 180 டிக்கெட்டுகள் முன்பதிவு செய்துள்ளேன்.

பட்டமளிப்பு விழாவில் பங்கேற்கும் மாணவர்கள், பெற்றோர், கல்லுாரி ஆசிரியர்கள், ஊழியர்கள், என் குடும்பத்துடன் மோகன்லால் திரைப்படத்தை காண உள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement