சாலையில் சாய்ந்துள்ள கருவேல மரங்கள் வாகன ஓட்டிகள் தினமும் அவதி

சித்தாமூர்:பெரியகயப்பாக்கத்தில், சாலையின் இரண்டு புறங்களிலும் கருவேல மரங்கள் சாய்ந்து உள்ளதால், சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர்.

சித்தாமூர் அருகே பெரியகயப்பாக்கம் - -சிறுமயிலுார் இடையே, 5 கி.மீ., துாரமுள்ள தார்ச்சாலை உள்ளது.

பேட்டை, கடப்பேரி, இரண்டடி, மதுராபுதுார், பெரியகயப்பாக்கம் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள், இந்த சாலையை பயன்படுத்தி வருகின்றனர்.

தினசரி ஏராளமான வாகனங்கள் சாலையில் செல்கின்றன.

அரசு மற்றும் தனியார் பேருந்துகள், இந்த சாலையில் செல்கின்றன.

பெரியகயப்பாக்கம் திரவுபதி அம்மன் கோவில் அடுத்த வயல்வெளிப் பகுதியில் கருவேல மரங்கள் மற்றும் மூங்கில் மரங்கள், இந்த சாலையின் இரண்டு புறங்களிலும் சாய்ந்து உள்ளதால், பேருந்தில் செல்லும் பயணியரை, ஜன்னல் வழியாக கருவேல முட்கள் காயப்படுத்துகின்றன.

மேலும், ஒரே நேரத்தில் இரண்டு கனரக வாகனங்கள் எதிரெதிரே வந்தால், சாலையை கடந்து செல்ல சிரமப்படுகின்றன.

எனவே, நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, சாலை மீது சாய்ந்துள்ள கருவேல மரம் மற்றும் மூங்கில் மரங்களின் கிளைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Advertisement