அ.தி.மு.க.,வுடன் கூட்டணி: அமைச்சர் அமித் ஷா கூறியது இதுதான்!

26

புதுடில்லி; தமிழகத்தில் அ.தி.மு.க.,வுடன் கூட்டணி அமைப்பது தொடர்பாக விவாதங்கள் நடந்து வருகின்றன என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.



பிரபல ஆங்கில தொலைக்காட்சிக்கு அவர் சிறப்பு பேட்டி அளித்தார். அதில் அவர் கூறியதாவது;


தமிழகத்தில் ஆட்சியில் இருக்கும் தி.மு.க., அரசு ஊழல் மட்டுமே செய்து கொண்டிருக்கிறது. அதன் காரணமாக அந்த மாநில இளைஞர்கள் வெளியேறி கொண்டிருக்கின்றனர். தொழில் நிறுவனங்களும் அங்கிருந்து வெளியேறுகின்றன.


தமிழகம் ஒரு காலத்தில் தென்னிந்தியாவில் முற்போக்கான மாநிலமாக கருதப்பட்டது. ஆனால் தி.மு.க., அரசின் தவறான கொள்கைகளால் தடுமாறி, குழப்பத்திற்கு ஆளாகி நிற்கிறது. இதனால் பொதுமக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். வரும் தேர்தலில் அங்கு தேசிய ஜனநாயக கூட்டணி அரசு அமைக்கப்படும்.


தமிழ் வழியில் பொறியியல், மருத்துவப் படிப்புகளை அறிமுகம் செய்யாமல் தி.மு.க., தமிழர்களுக்கு எதிரானதாக செயல்படுகிறது. இந்த படிப்புகளை தமிழில் கற்பிக்க வேண்டும் என்று தி.மு.க.,விடம் கூறினேன். ஆனால் அவர்கள் அதை செயல்படுத்தவில்லை.


தேசிய கல்விக் கொள்கையின் படி, தொடக்கக் கல்வி என்பது தாய்மொழியில் கற்பிக்கப்பட வேண்டும். மத்திய பல்கலைக்கழகங்களில் இளங்கலை பட்டப்படிப்பு சேர்க்கையின் போது நடத்தப்படும் பொது நுழைவுத்தேர்வு 13 மொழிகளில் நடத்தப்படுகிறது. ஆனால் தி.மு.க.,வின் எதிர்ப்பு நிலை காரணமாக தமிழில் இந்த தேர்வு நடத்தப்படுவது இல்லை.


மகன் உதயநிதியை தமது வாரிசாக ஸ்டாலின் முன்னிறுத்துவதன் மூலம், வாரிசு அரசியலை ஊக்குவிக்கிறார். அவர்கள் தேர்தலுக்காக மட்டுமே தற்போது தொகுதி மறு வரையறை பிரச்னையை கிளப்புகின்றனர். மத்திய அரசு தொகுதி மறுவரையறை குறித்து ஏதாவது சொன்னதா? இப்போது அதை ஏன் எழுப்பினார்கள்?


5 ஆண்டுகளாக அவர்கள் (தி.மு.க.)ஊழலில் ஈடுபட்டனர். இப்போது திடீரென முழித்துக் கொண்டு இருக்கின்றனர். வரையறை நிர்ணயம் செய்யப்படும் போது யாருக்கும் எந்த அநீதியும் ஏற்படாது. அநீதி நடக்க 0.01 சதவீதம் கூட வாய்ப்பு இல்லை.


அ.தி.மு.க,வுடன் பா.ஜ., கூட்டணி வைப்பது குறித்து விவாதங்கள் நடந்து வருகின்றன. சரியான நேரம் வரும்போது அதுபற்றி அறிவிப்போம்.


ஜம்மு காஷ்மீரில் தேர்தல்கள் நடந்தது. தேர்தலில் ஒருமுறை கூட மறு வாக்குப்பதிவு நடக்கவில்லை. கண்ணீர் புகை குண்டு வீசப்படவில்லை. முதல்முறையாக 60 சதவீதம் வாக்குகள் பதிவாகின.


மிக பெரிய வெற்றி கிடைத்துள்ளது. இது பா.ஜ., வெற்றியல்ல. வெற்றி பெற்றவர்கள் அரசாங்கத்தை நடத்திக் கொண்டு இருக்கின்றனர். மாநில அந்தஸ்து என்று வரும்போது பல அளவுகோல்கள் உள்ளன. ஜம்மு காஷ்மீருக்கு உரிய மாநில அந்தஸ்தை உறுதி செய்வோம் என்று பார்லி.யில் பேசி இருக்கிறேன். பிரதமரும் அவ்வாறே பேசியுள்ளார்.


இவ்வாறு உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியுள்ளார்.

Advertisement