பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு; கி.கிரியில் 591 பேர் 'ஆப்சென்ட்'

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில், நேற்று துவங்கிய பத்தாம் வகுப்பு தேர்வை, 591 மாணவ, மாணவியர் எழுதவில்லை.

தமிழகம் முழுதும் நேற்று பத்தாம் வகுப்பு தேர்வு துவங்கியது. கிருஷ்ணகிரி கல்வி மாவட்டத்தில், 13,942 மாணவ, மாணவியர் ஓசூர் கல்வி மாவட்டத்தில், 10,917 மாணவ, மாணவியர் என மொத்தம், 24,859 பேர் பத்தாம் வகுப்பு பயின்று வந்தனர். இதில் நீண்ட நாட்கள் பள்ளிக்கு வராத மாணவர்கள் நீங்கலாக, 24,837 பேருக்கு ஹால் டிக்கெட் வழங்கப்பட்டது. அவர்கள் அனைவருக்கும் கிருஷ்ணகிரி, ஓசூர் கல்வி மாவட்டங்களை சேர்ந்த, 115 தேர்வு மையங்களில் தேர்வு நடந்தது.

முதல்நாள் தமிழ்மொழி தேர்வை மாணவ, மாணவர்கள் ஆர்வமுடன் எழுதினர். கிருஷ்ணகிரி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில், முதல் நாள் தேர்வெழுத சென்ற மாணவியர், ஆசிரியர்கள் காலில் விழுந்து ஆசி பெற்று தேர்வு மையம் சென்றனர்.
அதேபோல புனித அன்னாள் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு தேர்வெழுதிய மாணவியர்களுக்கு, பங்குதந்தை இசையாஸ் தலைமையில் கூட்டு பிரார்த்தனை நடத்தப்பட்டது.

நேற்றைய முதல்நாள் தமிழ் தேர்வில், 24,191 மாணவ, மாணவியர் தேர்வெழுதினர். 591 மாணவ, மாணவியர் தேர்வு எழுதவில்லை. ஒரு மொழி பாட விலக்குபடி, 55 மாணவர்கள் தேர்வு எழுதவில்லை. பத்தாம் வகுப்புக்கு விண்ணப்பித்த, 200 தனித்தேர்வர்களில், 177 பேர் தேர்வெழுதினர், 23 பேர் தேர்வெழுதவில்லை.

Advertisement