மறைமலைநகர் பூங்காவை சீரமைக்க வலியுறுத்தல்

மறைமலைநகர்:மறைமலைநகரில், குடியிருப்புகளுக்கு நடுவே புதர் மண்டி உள்ள பூங்காவை சீரமைத்து, பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டுமென, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மறைமலைநகர் என்.ஹெச்- 2 பகுதியில், 2,000க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்கு, வெளி மாவட்டத்தைச் சேர்ந்த பலர் இங்கு புதிதாக வீடுகள் கட்டி குடியேறி வருகின்றனர்.

இளைஞர் மற்றும் இளம் பெண்கள் வாடகைக்கு வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் நகராட்சி நிர்வாகம் சார்பில் காமராஜர் பூங்கா அமைக்கப்பட்டு, குழந்தைகள் விளையாட சறுக்குமரம், ஊஞ்சல், முதியவர்கள் நடைபயிற்சி மேற்கொள்ள சிமென்ட் கற்கள் கொண்ட நடைபாதை உள்ளிட்டவை அமைக்கப்பட்டன.

பல ஆண்டுகளாக முறையாக பராமரிக்கப்பட்டு வந்த இந்த பூங்கா, தற்போது கடந்த சில மாதங்களாக பூட்டி வைக்கப்பட்டு, வீணாகி வருகிறது.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது:

காமராஜர் பூங்கா, கடந்த ஆறு மாதங்களுக்கும் மேலாக பராமரிக்கப்படாமல் அனைத்து உபகரணங்களும் வீணாகி வருகின்றன. சிறுவர்கள் விளையாட இடவசதி இல்லாததால் நீண்ட தூரம் ஜி.எஸ்.டி., சாலை அருகிலுள்ள நகராட்சி மைதானம் செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டு உள்ளது.

முதியவர்கள் தெருக்களில் நடைபயிற்சி செய்யும் நிலை ஏற்பட்டு உள்ளது. புதர் மண்டி உள்ளதால் விஷ ஜந்துக்களின் நடமாட்டமும் அதிகரித்து உள்ளது.

எனவே, பல ஆண்டுகளாக பூட்டப்பட்டு உள்ள பூங்காவை சீரமைத்து, மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர, நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement