நில அதிர்வுடன் வெடிசத்தம் திண்டுக்கல்லில் நேற்றும் பீதி

வடமதுரை:திண்டுக்கல் மாவட்டம், வடமதுரை, நத்தம், வேடசந்துார் பகுதியில் நேற்றும் காலை, 11:24 மணிக்கு நில அதிர்வுடன் பயங்கர வெடிசத்தம் கேட்டது. வீட்டை விட்டு மக்கள் அலறியடித்தபடி வெளியேறினர்.

மாவட்டத்தில் வடமதுரை, வேடசந்துார், சாணார்பட்டி, திண்டுக்கல் பகுதிகளை மையமாக கொண்டு அவ்வப்போது பகல் நேரங்களில் நில அதிர்வுடன் பயங்கர வெடிசத்தம் கேட்பது தொடர்கிறது.

இது தொடர்பாக, மாவட்ட நிர்வாகம், மாநில அரசு கவனத்திற்கு பலமுறை அப்பகுதி மக்கள் கொண்டு சென்றும் இதுவரை எந்தவொரு விளக்கமும் வெளியாகவில்லை. நேற்று முன்தினம் வெடிசத்தம் கேட்ட நிலையில், நேற்றும் வடமதுரை, நத்தம், வேடசந்துார் பகுதியில் நில அதிர்வுடன் பயங்கர வெடிசத்தம் கேட்டது.

மக்கள் அலறியபடி வீட்டை விட்டு வெளியேறினர். சத்தத்தின் அளவு கூடுதலாக இருந்ததால் கால்நடைகளும் அலறி ஓடின. அப்போது பயிற்சி விமானமும் பறந்து சென்றது.

கலெக்டர் சரவணன் கூறுகையில், ''அண்ணா பல்கலை உட்பட பல்வேறு குழுவினர் ஆய்வு மேற்கொண்டுள்ளனர். விபரங்கள் சென்னைக்கு அனுப்பட்டுள்ளது. முழுமையான ஆய்வு விபரங்கள் கிடைத்ததும் தெரியப்படுத்தப்படும்,'' என, முடித்துக் கொண்டார்.

Advertisement