'எனக்கும் ஆச்சரியமாகத்தான் இருக்கு'... வாஷிங்டன் சுந்தருக்கு சுந்தர் பிச்சை ஆதரவு

12


சென்னை: பஞ்சாப் அணிக்கு எதிரான பிரீமியர் லீக் போட்டியில் ஆல் ரவுண்டரான வாஷிங்டன் சுந்தருக்கு வாய்ப்பு வழங்கப்படாததற்கு எதிராக கூகுள் நிறுவனத்தின் சி.இ.ஓ., சுந்தர் பிச்சை குரல் கொடுத்துள்ளார்.


பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடர் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரில் நேற்று முன்தினம் (மார்ச் 25) நடந்த போட்டியில் பஞ்சாப் - குஜராத் அணிகள் மோதின. இதில், முதலில் பேட் செய்த பஞ்சாப் அணி, கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் ( 97 ரன்கள், நாட் அவுட்), பிரியன்ஸ் ஆர்யா (47), ஷஷாங்க் சிங் (44 ரன்கள், நாட் அவுட்) ஆகியோரின் அதிரிடியான ஆட்டத்தால், 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 243 ரன்கள் சேர்த்தது.

இதைத் தொடர்ந்து, பேட் செய்த குஜராத் அணியும் அதிரடியாக ஆடியது. இருப்பினும், அந்த அணியால் 232 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால், 11 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி வெற்றி பெற்றது.

இந்தப் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த ஆல் ரவுண்டரான வாஷிங்டன் சுந்தரை அணியில் சேர்க்காதது ஏன்? என்ற கேள்வி எழுந்தது. மேலும், இது தொடர்பாக சமூக வலைதளங்களில் அவரது ரசிகர்கள் விவாதத்தையே நடத்தினர்.

வாஷிங்டன் சுந்தருக்கு ஆதரவாக ரசிகர் ஒருவர் கேள்வி எழுப்பி எக்ஸ் தளத்தில் கருத்து பதிவிட்டிருந்தார். அதாவது, "இந்திய அணியில் இடம் பிடிக்கும் 15 வீரர்களில் ஒருவராக இருக்கும் வாஷிங்டன் சுந்தருக்கு, ஐ.பி.எல்., தொடரில் 10 அணிகள் இருந்தாலும், ஆடும் லெவனில் சேர்க்கப்படாது மர்மமாக இருந்து வருகிறது," எனக் குறிப்பிட்டிருந்தார்.

இந்த நிலையில், அவரது இந்தப் பதிவுக்கு ஆதரவாக தமிழகத்தைச் சேர்ந்தவரும், கூகுள் நிறுவனத்தின் சி.இ.ஓ.,வுமான சுந்தர் பிச்சை கருத்து பதிவிட்டுள்ளார். அதில், 'இந்த விஷயம் எனக்கும் கூட ஆச்சரியமாக இருக்கிறது', என்று குறிப்பிட்டுள்ளார். அவரது இந்தப் பதிவுக்கு பலரும் ஆதரவு தெரிவித்து கமென்ட் தெரிவித்து வருகின்றனர்.

Advertisement