எம்புரான் சர்ச்சைக்கு வருத்தம் தெரிவித்த மோகன்லால்: பிரச்னைக்குரிய காட்சிகளை நீக்குவதாக அறிவிப்பு

17

திருவனந்தபுரம்: எம்புரான் படத்தில் பிரச்னைக்குரிய காட்சிகளை நீக்குவதாக முடிவு செய்துள்ளதாகவும், நடந்த சம்பவத்திற்கு வருத்தம் தெரிவிப்பதாகவும் பிரபல நடிகர் மோகன் லால் அறிவித்துள்ளார்.



மல்லுவுட்டில் மட்டுமல்லாது, இந்திய சினிமாவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய படம் எம்புரான். அரசியல் பின்னணியை மையமாக கொண்டு பின்னப்பட்ட கதைக் களத்தில் வெளியான லூசிபர் படத்தின் 2ம் பாகம்.


படம் வெளியாகி வசூலில் சாதனை படைத்துள்ள எம்புரானில் சில சர்ச்சைக்குரிய காட்சிகள் இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. அரசியல் ரீதியாகவும் எதிர்ப்புகள் எழுந்த நிலையில், படத்தில் நடித்த பிரபல நடிகர் மோகன்லால் வருத்தம் தெரிவித்துள்ளார்.


இதுகுறித்து அவர் சமூகவலைதளத்தில் வெளியிட்ட பதிவில் கூறி உள்ளதாவது;


லூசிபர் படத்தின் 2ம் பாகமாக வெளிவந்திருக்கும் எம்புரான் படத்தில் இடம்பெற்றுள்ள சில அரசியல், சமூக கருத்துகள் என் அன்புக்குரியவர்கள் பலருக்கு மிகுந்த மன உளைச்சல் ஏற்படுத்தி இருப்பதை அறிந்தேன்.


கலைஞனாக எந்த படமும் எந்த ஒரு அரசியல் இயக்கம், சித்தாந்தம் அல்லது பிரிவினர் மீது வெறுப்புணர்வு கொண்டிருக்க வில்லை என்பதை உறுதிப்படுத்துவது எனது கடமை.


எனவே, அன்புக்குரியவர்களுக்கு ஏற்பட்ட துயரத்திற்காக நானும், படக்குழுவினரும் உண்மையிலேயே வருந்துகிறோம். அந்த பொறுப்பு படத்திற்கான உழைத்த அனைவருக்கும் உள்ளது என்பதை உணர்கிறோம்.


ஆகையால் படத்தில் இருந்து இதுபோன்ற காட்சிகளை கட்டாயமாக நீக்க முடிவு செய்திருக்கிறோம். 4 தசாப்தங்களாக திரையுலக வாழ்க்கையை உங்களில் ஒருவராக வாழ்ந்து வருகிறேன். உங்கள் அன்பும், நம்பிக்கையும் மட்டுமே எனது பலம். அதை விட மோகன்லால் யாரும் இல்லை என்பதை நம்புகிறன்.


இவ்வாறு மோகன்லால் கூறி உள்ளார்.

Advertisement