'பார்' அரசே பார்! ஊரெல்லாம் சாராய வாடை; சுகாதாரத்துக்கு பாடை

டாஸ்மாக் மது விற்பனையில் ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் நடந்திருப்பதாக அமலாக்கத்துறை அறிவித்ததும், அதற்கான ஆதாரம் இருப்பதாகவும், தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை பகிரங்கமாக அறிவித்ததும், தமிழகத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
டாஸ்மாக் மதுக்கடை விவகாரம், இன்று, நேற்று மட்டுமல்ல... தேர்தல் நெருங்கும் போதெல்லாம், விவாத பொருளாகி விடுகிறது.
மகளிர் ஓட்டுகளை கவர்வதற்காக, தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளின் எண்ணிக்கை படிப்படியாக குறைக்கப்படும் என, இரு திராவிட கட்சிகளும் தேர்தல் வாக்குறுதி கொடுத்தன. அதன்பின், உயர்நீதிமன்ற உத்தரவுப்படி, நெடுஞ்சாலை அருகேயுள்ள டாஸ்மாக் மதுக்கடைகள் மூடப்பட்டன. ஆனால், மது விற்பனையில் இதுவரை எவ்வித கட்டுப்பாடும் இல்லை.
தற்போது, கோவை தெற்கு மாவட்டத்தில், 108 டாஸ்மாக் மதுபான கடைகள் உள்ளன. அதில், பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதிகளில், 11 டாஸ்மாக் கடைகளும், ஆனைமலையில் 11 டாஸ்மாக் கடைகளும் செயல்படுகின்றன. இந்த கடைகள் பெரும்பாலும், 'பார்' உடன் செயல்படுகின்றன.
தற்போது, டாஸ்மாக் கடைகளின் எண்ணிக்கை அளவுக்கு, 'ரெக்கரேஷன் கிளப்' என்ற பெயரில், எப்.எல்.2 பார்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. எப்.எல்.2 பார்கள் நெடுஞ்சாலை அருகிலேயே அமைக்க அனுமதியும் வழங்கப்பட்டுள்ளது.
டாஸ்மாக் கடையில், குவாட்டருக்கு 10 ரூபாய் அதிகம் வசூலிக்கின்றனர். இரவு, 10:00 மணிக்கு மதுக்கடையை பூட்டியதில் இருந்து, மறுநாள் மதியம், 12:00 மணிக்கு கடையை திறக்கும் வரையிலும், ஆளும்கட்சியினர் ராஜ்ஜியமே நடக்கிறது.
டாஸ்மாக் பார்களில் ஆட்களை நியமித்து இல்லீகலாக, 'சரக்கு' விற்கின்றனர். இதற்கு தேவையான மது வகைகளை முந்தைய நாளே டாஸ்மாக் கடையில் வாங்கி, பாரில் இருப்பு வைத்து கொள்கின்றனர்.
இப்படி, இல்லீகலாக 'சில்லிங்' விற்பனை செய்யும் போது, குவாட்டருக்கு, ரகத்துக்கு ஏற்ப, 60 முதல், 70 ரூபாய் வரை அதிகம் வசூலிக்கின்றனர். அதே போன்று, பீர் ரகத்துக்கு ஏற்ப, 80 முதல், 90 ரூபாய் வரை அதிகம் வசூலிக்கின்றனர்.
இந்த இல்லீகல் வியாபாரம் எவ்வித தடையும் இன்றி, பகிரங்கமாக நடக்கிறது. இதற்காக, போலீஸ், கலால்துறை, டாஸ்மாக் அதிகாரிகளையும் ஆளும்கட்சியினர் 'கவனிப்பு' செய்கின்றனர். மேலிடத்தில் இருந்து பிரஷர் வரும் போது, கண்துடைப்புக்காக வழக்குப்பதிவு செய்கின்றனர்.
சமீபத்தில், ஆனைமலையில் உள்ள டாஸ்மாக் பார் ஒன்றில், காலை நேரத்திலேயே 'சரக்கு' பரபரப்பாக விற்பனையாகும் வீடியோ வைரலானது. ஆனால், அதிகாரிகள் மத்தியில் எந்த சலனமும் இன்றி இருக்கின்றனர்.
டாஸ்மாக் பார்களில், உடைந்த சேர்கள், சுத்தம் செய்யப்படாத மேஜைகள், கால்களுக்குள் புகுந்து ஓடும் பெருச்சாலிகள் என, எவ்வித பராமரிப்பும் இன்றி, சுகாதாரம் என்ன விலை என்று கேட்கும் நிலையில் உள்ளன. அங்கு தடையை மீறி விற்கும் பிளாஸ்டிக் டம்ளர் முதல் அனைத்துக்கும் அவர்கள் கூறுவது தான் விலை.
டாஸ்மாக் பார்களில் பயன்படுத்தும் பிளாஸ்டிக் டம்ளர்கள் போன்றவற்றை, பொதுவெளியில் குவிக்கின்றனர். 'பார்'களில்இருந்து வெளியேறும் பிளாஸ்டிக் கழிவுகளை கட்டுப்படுத்தாவிட்டால், சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படும்.
டாஸ்மாக் கடைகளில் 'சரக்கு' வாங்கும், 'குடி'மகன்கள், பொதுஇடமென பார்க்காமல், ரோட்டோரத்திலேயே அமர்ந்து குடிக்கின்றனர். குறிப்பாக, பொள்ளாச்சி - வால்பாறை ரோடு சமத்துார் அருகே, நகரப்பகுதியில் உள்ள டாஸ்மாக் கடை அருகேயும், ஆனைமலை அழுக்குச்சாமியார் கோவில் அருகேயும், சாலையோரத்தை திறந்தவெளி, 'பார்' ஆக மாற்றி மது குடிக்கின்றனர்.
'குடி'மகன்கள், பாட்டில்களை ரோட்டோரம் உடைத்தும் வீசிச் செல்கின்றனர். இந்த 'குடி'மகன்கள், போதை தலைக்கேறியதும் ரோட்டோரத்திலேயே உருளுகின்றனர். சிலர், வெயிலையும் பொருட்படுத்தாமல், சாக்கடை மீதும், மரத்தடியிலும் 'மட்டை' ஆகி விடுகின்றனர். ஆடைகள் கலைந்து, உடமைகள் சிதறி கிடப்பதை கூட அறியாதவர்களாக போதையில் மிதக்கின்றனர்.
போதை ஆசாமிகளால், ரோட்டில் செல்லும் வாகன ஓட்டுநர்களுக்கு இடையூறு ஏற்படுகிறது. போதையில் ரோட்டை கடக்கும் போது, விபத்து ஏற்படுகிறது. கோட்டூர் ரோடு மதுபானக்கடை அருகே உள்ள பஸ் ஸ்டாப்பில் தான் பள்ளி மாணவர்கள் காத்திருக்கின்றனர். இங்கு, 'குடி'மகன்கள் அட்டகாசத்தால், பெண்கள், மாணவியர் நிற்கவே பயப்படும் நிலை உள்ளது.
சமூக ஆர்வலர்கள் கூறுகையில், 'மது போதையே சட்டம்-ஒழுங்கு, பாலியல் பிரச்னைகளுக்கு முக்கிய காரணமாக உள்ளது. போதையால், நண்பரையே கொலை செய்யும் எண்ணம் ஏற்படுகிறது.
இன்னும் சொல்லப்போனால், போதையில் தாரம் யார், மகள் யார் என்பது கூட தெரியாமல் பாலியல் அத்துமீறல்கள் நடந்துள்ளதை, போலீஸ் வழக்குகள் வாயிலாக அறியலாம்.
போதையில் ரோட்டை கடப்பதால் விபத்து ஏற்படுகிறது. போதையில் வாகனம் ஓட்டுவதால், அவர்களுக்கு மட்டுமின்றி, மற்ற வாகன ஓட்டுநர்களுக்கும் பாதுகாப்பில்லாத நிலை ஏற்படுகிறது.
சிறுமிகளை பாலியல் ரீதியாக சீண்டுகின்றனர். கள்ளக்காதல் விபரீதத்தால் கொலைகள் நடக்கிறது. போதையை கைவிட முடியாதவர்கள், தற்கொலை செய்து கொள்ளும் விபரீதமும் நடக்கிறது. இதற்கெல்லாம், காரணமான போதை கலாசாரத்தை கட்டுப்படுத்தவும், விழிப்புணர்வு ஏற்படுத்தவும் அரசு நடவடிக்கை எடுக்கணும்,' என்றனர்.










மேலும்
-
அதிகாரத்திற்காக அரசியலுக்கு வரவில்லை: அண்ணாமலை
-
இனி ஒரு போதும் பிரியமாட்டேன்: அமித் ஷாவிடம் நிதிஷ் உறுதி
-
ஐதராபாத் அணி பேட்டிங்; டில்லி அணிக்காக அறிமுகமாகும் கே.எல். ராகுல்
-
எம்புரான் சர்ச்சைக்கு வருத்தம் தெரிவித்த மோகன்லால்: பிரச்னைக்குரிய காட்சிகளை நீக்குவதாக அறிவிப்பு
-
உல்லாச கப்பலில் அமேசான் நிறுவனருக்கு திருமணம்; யார் யாருக்கு அழைப்பு தெரியுமா?
-
மியான்மர் நாட்டில் பேரழிவு; நிலநடுக்கம் ஒரு பக்கம்; உள்நாட்டுப்போர் மறுபக்கம்!