தொகுதி மறுசீரமைப்பு குறித்து நிலைப்பாட்டை வகுக்க குழு; காங்கிரஸ் அறிவிப்பு

6


புதுடில்லி: ''தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக, தனது நிலைப்பாட்டை வகுக்க காங்கிரஸ் ஒரு குழுவை அமைக்கும்'' என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் வேணுகோபால் தெரிவித்தார்.



இது குறித்து, வேணுகோபால் அளித்த பேட்டி: தொகுதி மறுசீரமைப்பு விஷயத்தில் பல சிக்கல்கள் உள்ளன. மேலும் ஒரு தேசியக் கட்சியாக, அனைத்து அம்சங்களையும் கவலைகளையும் கணக்கில் எடுத்துக்கொண்டு, இந்த விஷயத்தில் நாம் கவனம் செலுத்த வேண்டும்.


தொகுதி மறுசீரமைப்பு செய்தால், லோக்சபாவில் ஒரு சில மாநிலங்களின் பிரதிநிதித்துவத்தைக் குறைக்கும் என்று அச்சம் இருக்கிறது. ஆனால் மத்திய அரசு இன்னும் அதன் நிலைப்பாட்டை தெளிவுபடுத்தவில்லை. இந்தப் பிரச்னையில் உள்ள அனைத்து சந்தேகங்கள், வதந்திகள் மற்றும் ஊகங்களைத் தீர்க்க வேண்டும்.


இது தொடர்பாக மத்திய அரசு விரிவான அறிக்கையை வெளியிடுவது அவசியம். மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுசீரமைப்பு செய்வதை எதிர்க்கிறோம். தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக, தனது நிலைப்பாட்டை வகுக்க காங்கிரஸ் ஒரு குழுவை அமைக்கும். மக்கள் தொகையை கட்டுப்படுத்திய மாநிலங்கள் பாதிக்கப்பட கூடாது. இவ்வாறு அவர் கூறினார்.



காங்கிரஸின் தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி மற்றும் கர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவகுமார் ஆகியோர் தமிழக முதல்வர் ஸ்டாலின் ஏற்பாடு செய்த கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டத்தில் கலந்து கொண்டனர். இதற்கிடையே, 'புதிய மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தாமல் தொகுதி மறுசீரமைப்பு மேற்கொள்ள கூடாது' என காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement