முதல்வர் ஸ்டாலினின் கபடநாடகம்; அண்ணாமலை காட்டம்

26

சென்னை: மும்மொழி கல்விக் கொள்கை விவகாரத்தில் உ.பி., முதல்வரின் பேச்சுக்கு பதிலளித்த தமிழக முதல்வரின் கருத்துக்கு பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை பதிலடி கொடுத்துள்ளார்.


தங்கள் வாக்கு வங்கி ஆபத்தில் இருப்பதாக உணரும்போது, மொழி குறித்த பிளவுகளை உருவாக்க முயற்சிப்பதாக உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், தமிழக முதல்வர் ஸ்டாலினை மறைமுகமாக விமர்சித்து இருந்தார்.


அவரது இந்தக் கருத்துக்கு பதில் அளித்த முதல்வர் ஸ்டாலின், "மொழி திணிப்பையும், ஆதிக்கத்தையும் எதிர்க்கிறோம். எந்த மொழிக்கும் எதிரானவர்கள் அல்ல. யோகி ஆதித்யநாத் வெறுப்பு குறித்து எங்களுக்குப் போதிக்க விரும்புகிறாரா?" என்று கூறியிருந்தார்.


இந்த நிலையில், முதல்வரின் இந்த கருத்துக்கு பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை பதிலடி கொடுத்துள்ளார்.


அவர் வெளியிட்டுள்ள அறிக்கை; அரசியலமைப்பு மற்றும் கூட்டாட்சி கட்டமைப்பின் பாதுகாவலர் என்ற போர்வையில் முதல்வர் ஸ்டாலின் ஒரு மோசடியாளராக திகழ்கிறார். பொதுவாக, மோசடி செய்பவர்கள் பணக்காரர்களை குறிவைத்து ஏமாற்றுவார்கள். ஆனால், எந்தவித பாகுபாடும் இல்லாமல், பணக்காரர்களையும், ஏழைகளையும் தி.மு.க., ஏமாற்றுகிறது.


தமிழக முதல்வரின் குடும்பத்தினர் நடத்தும் தனியார் பள்ளிகளில் 3 மொழிகள் கற்பிக்கப்படுவதும், ஆனால், அதனை அரசுப் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு செயல்படுத்த எதிர்ப்பு தெரிவிப்பதும் ஒட்டுமொத்த நாட்டிற்கே தெரியும். எனவே தான், உங்களை கபட நாடகம் ஆடுபவர் என்று அழைக்கிறார்கள்.


ஆங்காங்கே தனது கட்சிக்காரர்கள் நடத்தும் நாடகங்களை, தமிழக மக்களின் குரல் என்று முதல்வர் ஸ்டாலின் நினைக்கிறார். தேவையற்ற விஷயங்களில் மக்களின் கவனத்தை திசைதிருப்பும் உங்கள் முயற்சிகள் அம்பலமாகி விட்டதை நீங்கள் உணரவில்லை என்பது துரதிஷ்டவசமானது.


அறியாமை என்னும் பேரின்ப உலகில் நீங்கள் வாழுங்கள்; நாங்கள் தொந்தரவு செய்ய மாட்டோம், இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement