யோகாவால் வாழ்வில் சிறப்பான மாற்றம்

சென்னையில் யோகா பயிற்சி மையம் நடத்தி வரும் கவிதா மோகன்:
என் 13 வயது முதல் யோகா வகுப்புக்கு செல்கிறேன். ஆஸ்திரேலியாவில், எம்.எஸ்., புட் சயின்ஸ் படிப்பை முடித்துவிட்டு, சென்னை வந்ததும் திருமணம், குழந்தை என வாழ்க்கை சென்றது. கர்ப்ப காலத்தில் எனக்கு யோகா தான் மிகவும் உதவியாக இருந்தது; சுகப்பிரசவமும் ஆனது.
யோகாவால் நம் வாழ்க்கையில் சிறப்பான மாற்றங்களை கொண்டு வர முடியும் என்று அப்போது தான் உணர்ந்தேன். தேவை இருப்பவர்களுக்காக நாம் ஏன் யோகா பயிற்சி மையத்தை துவங்கக் கூடாது என்று நினைத்தேன்.
கர்ப்ப காலத்தில் பிரச்னையுடைய பெண்களை, மருத்துவர்கள் வாயிலாகக் கண்டறிந்து, யோகா சொல்லித்தர ஆரம்பித்தேன். வயிற்றில் கொடி சுற்றிய கர்ப்பிணியர், வயிற்றினுள் குழந்தை சரியாக திரும்பாத கர்ப்பிணியர் என பலரும் இந்த யோகா பயிற்சியால் பயனடைந்து, சுகப்பிரசவத்தில் குழந்தை பெற்றெடுத்தனர். இன்று வரை அவர்கள் யோகா பயிற்சியை தொடர்ந்து வருகின்றனர்.
உணவு, உறக்கமின்றி நான்கு நாட்கள் இரவு, பகலாக யோகா செய்து உலக சாதனை படைத்தேன். பின், 'ட்ரீ போஸ்' எனப்படும் ஒற்றைக்காலில் நின்று யோகா செய்து, மற்றொரு உலக சாதனை படைத்தேன். அடுத்ததாக, கைகள் இரண்டையும் கால்களுக்கு இடையே நுழைத்து, ஆமை போன்ற தோற்றத்தில் யோகா செய்து, சாதனை புத்தகத்தில் இடம்பெற்றேன்.
யோகாவில் டாக்டர் பட்டமும் பெற்றுள்ளேன். ஏரியல் யோகா குறித்து, ஒரு புத்தகம் எழுதி வெளியிட்டுள்ளேன். இந்தியாவில் முதன் முதலாக, ஏரியல் யோகா குறித்து எழுதியதும் நான் தான்.
இதை தொட்டில் யோகா என்றும் கூறுவர். நடனம் மற்றும் உடற்பயிற்சி சேர்ந்த கலவை இது. தரையில் பாதங்கள் படாமல், ஊஞ்சல் போல் தொங்கிக் கொண்டு செய்யும் பயிற்சியை உள்ளடக்கிய இந்த யோகாவால், சிறப்பான பலன்களை பெற முடியும்.
ஏரியல் யோகா பயிற்சி செய்வதால், ஆரோக்கியமான வழியில் உடல் எடையை குறைக்கலாம். உடலும் இலகுத்தன்மை அடையும். தவிர உங்களை இளமையாக வைத்திருக்க முடியும். 6 முதல் 60 வரை அனைத்து வயதினரும் ஆர்வமாக இந்த யோகாவை கற்கின்றனர்.
தைராய்டு, அதிக உடல் பருமன் உள்ளிட்ட பிரச்னைகளால் அவதிப்படும் ஏராளமான பெண்கள் யோகா பயில வருகின்றனர். ஆரோக்கியமான முறையில் வியக்கத்தக்க மாற்றங்களை கண்கூடாகப் பார்க்கின்றனர்.
சர்க்கரையை கட்டுக்குள் வைக்கவும் யோகா பயிற்சி மாமருந்தாக உள்ளது. ஆனால், விடாமுயற்சியும், முறையான பயிற்சியும் இருந்தால் மட்டுமே மேற்சொன்ன பலன்கள் யோகா வாயிலாக கிடைக்கும்.
மேலும்
-
பிரிமீயர் லீக் கிரிக்கெட்: லக்னோ அணி பேட்டிங்
-
இந்திய-சீன உறவு இன்னும் நெருக்கம் ஆகணும்: சீன அதிபர் ஜின்பிங் விருப்பம்
-
நான் யோகி; அரசியல் எனது முழு நேர வேலையல்ல: சொல்கிறார் உ.பி., முதல்வர்
-
மானியம் விடுவிக்க ரூ.12 ஆயிரம் லஞ்சம்: நாகை மாவட்ட தொழில் மைய மேலாளர் கைது
-
சென்னை மெட்ரோவில் 92.10 லட்சம் பேர் பயணம்
-
சின்னத்திரை காமெடி நடிகை ஷர்மிளா தாப்பா மீது பாஸ்போர்ட் மோசடி வழக்கு