மானியம் விடுவிக்க ரூ.12 ஆயிரம் லஞ்சம்: நாகை மாவட்ட தொழில் மைய மேலாளர் கைது

8

நாகப்பட்டினம்: மானியம் விடுவிக்க ரூ.12 ஆயிரம் லஞ்சம் வாங்கிய நாகை மாவட்ட தொழில்மைய மேலாளரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து கணக்கில் வராத ரூ.1 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.


நாகப்பட்டினம் மாவட்டம் திட்டச்சேரியை சேர்ந்தவர் சதீஷ்குமார்(25). இவர், வேலைவாய்ப்பு இல்லாத இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தில் டூவிலர் ஸ்பேர் கடை வைக்க நாகை மாவட்ட தொழில்துறை மையத்தில் கடந்த 2024ம் ஆண்டு விண்ணப்பித்து இருந்தார்.


இதன் பேரில் கடந்த பிப்., 28 ம் தேதி ஐஓபி வங்கியில் ரூ.5 லட்சம் பணம் கடன் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதில் 25 சதவீதம் மானியத்தொகையான ரூ.1.25 லட்சத்தை விடுவிக்க மாவட்ட தொழில் மைய மேலாளர் அன்பழகனை சதீஷ்குமார் தொடர்பு கொண்டார். அந்த மானியத்தை விடுவிக்க அன்பழகன் ரூ.12 ஆயிரம் லஞ்சம் கேட்டார்.


இதனை கொடுக்க விரும்பாத சதீஷ்குமார், லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார். அவர்களின் அறிவுரைப்படி, இன்று(எப்.,01) சதீஷ்குமார் ரசாயனம் தடவிய லஞ்சப்பணத்தை கொடுத்தார்.லஞ்சப்பணத்தை பெற்ற அன்பழகனை, அங்கு மறைந்து இருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும் களவுமாக கைது செய்தனர். தொடர்ந்து அவரது அறையை லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய சோதனையில் கணக்கில் வராத ரூ.1.01 லட்சப்பணம் பறிமுதல் செய்தனர்.

Advertisement