வடாரண்யேஸ்வரர் கோவிலில் பங்குனி உத்திரவிழா துவக்கம்

திருவாலங்காடு:திருத்தணி முருகன் கோவிலின் உபகோவிலான வடாரண்யேஸ்வரர் கோவில் திருவாலங்காடில் அமைந்துள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதம் உத்திர விழா விமரிசையாக நடைபெறும்.

பங்குனி உத்திர விழா, நேற்று காலை 9:00 மணிக்கு கோட்டை வாயிற்படி வரசித்தி விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, 10:00 மணிக்கு பந்தக்கால் நடப்பட்டது. ஏப்., 1ம் தேதி காலை 9:00 மணிக்கு கொடியேற்றத்துடன் விழா துவங்க உள்ளது.

இதை தொடர்ந்து, 10 நாட்கள் காலை - மாலை உற்சவர் சோமஸ்கந்தர், வண்டார்குழலி அம்மன் திருவாலங்காடின் முக்கிய வீதிகளில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். விழாவின் ஏழாம் நாளான வரும் 7ம் தேதி கமலத்தேர் விழா நடைபெற உள்ளது.

வரும் 8ம் தேதி இரவு 10:00 மணிக்கு வடாரண்யேஸ்வரர் வண்டார்குழலியம்மன் திருக்கல்யாணம் நடைபெறும். கடைசி நாளான 10ம் தேதி பங்குனி உத்திரம் நடைபெறும். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் மும்முரமாக செய்து வருகின்றனர்.

Advertisement