கடன் தொல்லையால் அவதி: சொந்த வீட்டில் கொள்ளை நாடகமாடி சிக்கிய நபர்

புதுடில்லி: டில்லியில், கடன் தொல்லையில் இருந்து விடுபட சொந்த வீட்டில் கொள்ளை நடந்ததாக நாடகமாடியவர் கைது செய்யப்பட்டுள்ளார்.



இதுபற்றிய விவரம் வருமாறு;


புட்டா சிங் என்பவர் ஏசி டெக்னிஷியனாக பணியாற்றி வருகிறார். சேவக் பார்க் பகுதியில் சொந்தமான கடை ஒன்றையும் வைத்துள்ளார். ஏராளமான வங்கிகளில் கடன்களை வாங்கி குவித்த அவர், அவற்றை திருப்பிச் செலுத்த முடியாமல் தவித்துள்ளார்.


அனைத்து கடன் பிரச்னைகளிலும் இருந்து விடுபட என்ன வழி என்று யோசித்தவருக்கு சொந்த வீட்டில் கொள்ளை போனதாக நாடகமாடி அங்குள்ள நகைகளை விற்று கடன்களை அடைத்துவிடலாம் என்று விபரீத ஐடியா தோன்றிருக்கிறது.


இந்த விபரீத ஐடியாவை செயல்படுத்த நாள் பார்த்திருந்த புட்டா சிங்குக்கு அதற்கான நேரமும் வந்தது. வழக்கம் போல் வீட்டில் இருந்து அவர் கிளம்பி போயுள்ளார். வீட்டில் இருந்த அவரது மனைவியும், மளிகை கடைக்கு சென்றுவிட்டு திரும்பிய போது வீட்டில் இருந்த பணம், நகை கொள்ளை போனது.


அதிர்ச்சியடைந்த புட்டா சிங் மனைவி போலீசில் புகார் அளித்துள்ளார். துரிதமாக விசாரணையில் இறங்கிய போலீசார், கொள்ளை நடந்ததாக கூறப்பட்ட நேரத்தில் அங்கு பதிவான சி.சி.டி.வி., காட்சிகளை போட்டு பார்த்தனர். அதில் கொள்ளையர்கள் போன்றோ அல்லது சந்தேக நபர்களோ அங்கு வந்து செல்லவில்லை என்பதை கண்டறிந்தனர்.


வீட்டின் முன்பக்கம் வழியாக, பலவந்தமாக கதவின் பூட்டை உடைத்தோ அல்லது கள்ளச்சாவி பயன்படுத்தியோ வீட்டினுள் மர்ம நபர்கள் நுழையவில்லை என்பதை ஊர்ஜிதப்படுத்தினர். வீட்டின் சாவி புட்டா சிங்கிடம், அவரது மனைவியிடம் மட்டுமே இருந்துள்ளது. சி.சி.டி.வி.,யில் கொள்ளை நடந்த நேரத்தில் புட்டா சிங் மட்டுமே வீட்டுக்கு வந்து சென்றது தெரியவந்தது.


சந்தேக நிழல் புட்டா சிங் மீது படிய, அவரிடம் போலீசார் துருவி, துருவி விசாரணை நடத்தினர். அப்போது கடன் தொல்லை காரணமாக சொந்த வீட்டில் கொள்ளை நாடகம் நடத்தியதை ஒப்புக் கொண்டு இருக்கிறார்.


இதுகுறித்து துவாரகா துணை கமிஷனர் அங்கித் சிங் கூறியதாவது; மார்ச் 21ம் தேதி மதியம் 3 மணியில் இருந்து மாலை 6 மணிக்குள் தமது வீட்டில் கொள்ளை போனதாக புட்டா சிங் கூறினார். விசாரணையில் மர்ம நபர்கள் கைவரிசை காட்டவில்லை என்பதை கண்டறிந்தோம். தொடர் விசாரணையில் சொந்த வீட்டில் இருந்து, நகை, பணத்தை அவர் கொள்ளையடித்தது தெரிந்தது.


கடன் தொல்லையில் இருந்து தப்பிக்கவே அவர் இந்த நாடகமாடி இருக்கிறார். அவரை கைது செய்துள்ளோம். நகை,பணம் மீட்கப்பட்டுவிட்டது.


இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement