கும்பமேளா புகழ் மோனலிசாவுக்கு நடிக்க வாய்ப்பளித்த இயக்குனர் சனோஜ் மிஸ்ரா பாலியல் வழக்கில் கைது

10

புதுடில்லி: மகா கும்பமேளா புகழ் மோனலிசாவுக்கு நடிக்க வாய்ப்பு வழங்கிய இயக்குனர் சனோஜ் மிஸ்ரா பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்டார்.

சமீபத்தில் நடந்து முடிந்த கும்பமேளாவில் பாசி மணி விற்பனையாளரான 16 வயது மோனலிசா போல்ஸ்லே மிகவும் பிரபலம் அடைந்தார்.

அனைத்து தொலைக்காட்சிகள், பத்திரிகைகளிலும் அவரது பேட்டிகள் தொடர்ந்து வெளியாகின. சமூக வலைத்தளங்கள் அனைத்திலும் அவரது வீடியோக்கள் பரவின.
அவரது பிரபலத்தை பயன்படுத்திக்கொள்ள பாலிவுட் இயக்குனர் சனோஜ் மிஸ்ரா விரும்பினார்.

மோனாலிசாவுக்கு 'தி டைரி ஆப் வெஸ்ட் பெங்கால்' என்ற திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு அளித்தார்.
அதன் மூலம் சனோஜ் மிஸ்ரா அனைவரின் கவனத்தை பெற்றார்.

இந்நிலையில், சனோஜ் மிஸ்ரா, கதாநாயகியாக ஆசைப்பட்ட ஒரு சிறிய நகரத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் கிளம்பியது.


பாதிக்கப்பட்ட 28 வயது பெண் டில்லி போலீசில் புகார் அளித்தார்.
அதனை தொடர்ந்து டில்லி கோர்ட்டில் சனோஜ் மிஸ்ரா, இந்த வழக்கில் ஜாமின் மனு தாக்கல் செய்திருந்தார். இந்நிலையில் டில்லி கோர்ட் அவரது ஜாமின் மனுவை நிராகரித்தது.
உளவுத்துறை தகவல் மற்றும் தொழில்நுட்ப கண்காணிப்பைத் தொடர்ந்து டில்லி காவல்துறையினரால் சனோஜ் மிஸ்ரா இன்று கைது செய்யப்பட்டார்.

பாதிக்கப்பட்ட பெண் புகாரில் கூறியதாவது:

நான் முதன்முதலில் 2020ம் ஆண்டு உ.பி., மாநிலம் ஜான்சியில் வசிக்கும் போது டிக்டாக் மற்றும் இன்ஸ்டாகிராம் மூலம் சனோஜ் மிஸ்ராவுடன் தொடர்பு கொண்டேன். இதில் நட்பு ஏற்பட்டது.

இந்நிலையில் 2021 ஜூன்-17 அன்று எனக்கு போன் செய்து ஜான்சி ரயில் நிலையத்திற்கு வந்திருப்பதாக கூறினார்.

பயத்தின் காரணமாக அவரை சந்திக்க முடியாது என்று கூறிய போது கட்டாயப்படுத்தினார். மறுநாளும் மீண்டும் மிரட்டல் விடுத்து, ரயில் நிலையத்தில் சந்திக்குமாறு வலியுறுத்தினார்.

அதை தொடர்ந்து மிஸ்ரா, ஜூன் 18, 2021 அன்று, என்னை ஒரு ரிசார்ட்டுக்கு அழைத்துச் சென்று, போதைப்பொருள் கொடுத்து, பாலியல் வன்கொடுமை செய்தார். பின்னர் அவர் என்னை ஆட்சேபனைக்குரிய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுத்து, தகாத உறவில் ஈடுபடுத்தி மிரட்டினார்.

அதனை தொடர்ந்து என்னை திருமணம் மற்றும் சினிமா வாய்ப்பு தருவதாக பொய்யான வாக்குறுதிகளை அளித்தார். அத்துடன் மும்பையில் ஒன்றாக வசித்தோம்.

இந்தக் காலகட்டத்தில், அவர் என்னை பலமுறை தாக்கி, மூன்று முறை கருக்கலைப்பு செய்ய கட்டாயப்படுத்தினார்.

பிப்ரவரி 2025ல், அவர் என்னை கைவிட்டுச் சென்றார். அவர் மீது சட்ட நடவடிக்கை எடுத்தால் என்னுடைய தனிப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிடுவதாக மிரட்டினார்.

இவ்வாறு பாதிக்கப்பட்ட பெண் கூறினார்.


போலீசார் கூறுகையில்,

பாதிக்கப்பட்ட பெண் புகாரின் அடிப்படையில், பாலியல் வன்கொடுமை, உடல் ரீதியான தாக்குதல், கருச்சிதைவு மற்றும் குற்றவியல் மிரட்டல் ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டது. உரிய சட்டப்பிரிவின் கீழ் பெண் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது.

புலனாய்வாளர்கள் முசாபர்நகரில் இருந்து மருத்துவ பதிவுகளையும் பெற்றனர், இது கட்டாய கருக்கலைப்பை உறுதிப்படுத்துகிறது.

சனோஜ் மிஸ்ரா 45, திருமணமானவர் மற்றும் அவரது குடும்பத்துடன் மும்பையில் வசிக்கிறார் என்பதும் தெரியவந்தது. இந்நிலையில் அவரை கைது செய்து விசாரித்து வருகிறோம் என்றனர்.

Advertisement